'கல்யாணம் பண்ணலாம்'...'ஆனா உன்மேல சந்தேகமாக இருக்கு'... இளைஞர் செய்த கொடூரம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Oct 08, 2019 02:39 PM

திருமணம் செய்ய இருந்த நிலையில் காதலியின் மீது சந்தேகப்பட்டு காதலன் செய்த வெறிச்செயல் பலரையும் அதிரச் செய்துள்ளது.

Mumbai Police arrested a Youth who allegedly killed his Girlfriend

மும்பை ரேரோடு தாருகானா பகுதியை சேர்ந்தவர் சந்தியா. 22 வயதான இவர் எம்.ஏ. பட்டதாரி. இதனிடையே சந்தியாவும்,  விஜய் குமார் என்ற வாலிபரும் காதலித்து வந்தார்கள். இருவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் திருமணம் செய்ய இருந்த நிலையில், நேற்றுமுன் தினம் 2 பேரும் சாந்தாகுருஸ், கோலிபர் ரோட்டில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் வெகுநேரம் ஆகியும் அவர்கள் இருவரும் இருந்த அறையின் கதவு திறக்கப்படவில்லை. இதனால் ஹோட்டல் ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஊழியர்கள் கதவை தட்டினர். ஆனால் உள்ளே இருந்து எந்த பதிலும் வராததால் மாற்று சாவி மூலம் கதவை திறந்து பார்த்துள்ளார்கள். அப்போது ஹோட்டல் ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். ஹோட்டலுக்கு காதலனுடன் வந்த சந்தியா அங்கு மயங்கி கிடந்துள்ளார். உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சந்தியாவை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கு சந்தியாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சந்தியாவின் காதலனை தேடும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டார்கள். அப்போது சிவ்ரி பகுதியில் சந்தியாவின் காதலன் விஜய் குமார் லாரி முன் விழுந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் காவல்துறையினருக்கு தெரிய வந்தது.

இதையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் விஜய் குமாரிடம் விசாரணை மேற்கொண்டார்கள். இதற்கிடையே நடந்த சம்பவம் குறித்து தெரிவித்த காவல்துறையினர், ''சந்தியாவும், விஜய்குமாரும் காதலித்து வந்து உள்ளனர். இருவரும் திருமணம் செய்ய இருந்த நிலையில், சந்தியாவின் நடத்தையின் மீது விஜய்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சந்தியா வேறு சிலருடன் தொடர்பில் இருப்பதாக அவர் நினைத்துள்ளார். இதனால் இருவருக்கும் அவ்வப்போது பிரச்னை எழுந்துள்ளது.

சம்பவத்தன்று சந்தியாவை ஓட்டல் அறைக்கு அழைத்து சென்று கயிறால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் அங்கு இருந்து சிவ்ரி சென்று லாரி முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்று இருக்கிறார். சந்தியா கொலை செய்யப்படுவதற்கு முன்பு பாலியல் ரீதியாக துன்புறுத்த பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் காவல்துறையினருக்கு எழுந்துள்ளது. எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் உறுதி செய்யப்படும்'' என காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.

மும்பையில் தமிழக இளைஞர் ஒருவர் காதலியை கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #MUMBAI #KILLED #MURDER #SUICIDEATTEMPT #MUMBAI POLICE #SANDHYA HARIJAN #VIJAY KUMAR