'அப்பா வாங்கிய கடன்'...'அம்மா'க்கு ஏன் கஷ்டம் கொடுக்கணும்'...'கல்யாண பெண்ணின் நெஞ்சை உருக்கும் சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Nov 16, 2019 12:14 PM

கோவையில் புதுப்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், அதற்கான காரணம் நெஞ்சை உருக்குவதாக அமைந்துள்ளது.

Young Girl Commits Suicide Month Before Marriage in Coimbatore

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவருடைய மனைவி மோகனா. இவர்களுக்கு சத்யா என்ற மகளும், பிரவீன்குமார் என்ற மகனும் உள்ளனர். இதனிடையே சந்திரன் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்து விட, மோகனா விவசாய கூலி வேலை செய்து தனது இரண்டு பிள்ளைகளையும் காப்பாற்றி வந்தார். இதற்கிடையே சத்யாவுக்கு கோவை மாவட்டத்தை சேர்ந்த ஒரு வாலிபருடன் கடந்த சில தினங்களுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு, அடுத்த மாதம் திருமணம் செய்யலாம் என முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் திருமண ஏற்பாடுகள் வீட்டில் நடைபெற்று கொண்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் காலையில் இருந்து புதுப்பெண் சத்யாவை காணவில்லை. இதனால் பதறி போன தாய் மோகனா, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் மகள் சத்யாவை தேடினார். இந்தசூழ்நிலையில் சத்யா அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் பிணமாக மிதப்பதாக அருகில் இருந்தவர்கள் தகவல் தெரிவித்தார்கள். இதனால் பதறி போன அவர், அங்கு சென்று பார்த்தார்.

இதனிடையே நடந்த சம்பவம் குறித்து  போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். இதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று கிணற்றுக்குள் இறங்கி சுமார் 6 மணி நேரம் போராடி உடலை மீட்டனர். கல்யாணம் ஆக இருந்த நிலையில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த சூலூர் வருவாய் ஆய்வாளர் லாரன்ஸ், மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டார்கள்.

காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ''சந்திரனுக்கு ஏற்கனவே அதிகளவில் கடன் இருந்திருக்கிறது. அவர் இறந்த பிறகு மோகனா கூலி வேலை செய்து அந்த கடன்களை கட்டி வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் மகள் சத்யாவிற்கு திருமண ஏற்பாடுகளை அவர் செய்துள்ளார். அதற்கும் அவர் வெளியில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஏற்கனேவே தந்தை வாங்கிய கடன் அதிக அளவில் இருக்கும் நிலையில், அதனை அடைக்க தாய் படும் கஷ்டத்தை பார்த்த மகள் சத்யாவிற்கு, தனது திருமணத்திற்கு தாய் கடன் வாங்குவதில் உடன்பாடு இல்லாமல் இருந்துள்ளது. அது குறித்து அம்மாம மோகனாவிடம் கேட்டுள்ளார்.

இந்நிலையில் ஏற்கனேவே அம்மாவின் கஷ்டத்தால் மனவிரக்தியில் இருந்த மகள் சத்யா, மீண்டும் தன்னால் அம்மாவிற்கு கடன் சுமை ஏற்பட வேண்டாம் என தற்கொலை செய்து இருக்கலாம்'' என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. இருப்பினும் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? அல்லது கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் நெருங்கி வரும் நிலையில், அம்மாவின் கஷ்டத்தை பார்த்து புதுப்பெண் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : #SUICIDEATTEMPT #COIMBATORE #YOUNG GIRL #SUICIDE #MARRIAGE