'சுடிதார் பேண்டின் கயிறை கூட கட்ட தெரியாது'...'ஆனா தூக்கு கயிறு நெரிக்கும் போது'...தாய் கண்ணீர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Jeno | Nov 14, 2019 09:16 AM
ஐஐடி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ள நிலையில், தமிழகம் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பித்தான் எனது மகளை இங்கு படிக்க அனுப்பினோம் என மாணவி பாத்திமா லத்தீப்பின் தாய் உருக்கத்துடன் கூறியுள்ளார்.
ஐஐடி சென்னையில் படித்துவந்த கேரளாவை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி தற்கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் தற்கொலைக்கு சில பேராசிரியர்கள் தான் காரணம் என அவரது குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் மாணவியின் தாய், தமிழகத்தை நம்பி தான் எனது மகளை அனுப்பியதாக உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், '' பாத்திமாவை படிப்பிற்காக வெளியூருக்கு அனுப்புவதற்கே பயமாக இருந்தது. அதோடு அவளை முக்காடு அணிவதற்கு கூட வேண்டாம் என்றே சொல்லி விட்டோம். காரணம் இஸ்லாமியப் பெண் என்ற அடிப்படையில் அவளுக்கு தொல்லைகள் ஏற்படுமோ என்ற காரணம் தான் முதன்மையாக இருந்தது. இதன்காரணமாக மற்ற பிள்ளைகள் போன்று சாதாரண ஆடையினை அணிய சொன்னோம்.
இதற்கிடையே பாத்திமாவுக்கு பனாரஸில் மேற்படிப்பு படிக்க இடம் கிடைத்தது. ஆனால் வட மாநிலங்களுக்கு அனுப்புவதற்கு பயமாக இருந்தது. ஆனால் பாத்திமாவோ நான் விமானத்தில் தானே செல்ல போகிறேன், அதனால் கவலை வேண்டாம் என கூறினாள். இருந்தபோதும் மகளை அங்கு அனுப்பவில்லை. இந்த சூழ்நிலையில் தான் பாத்திமாவுக்கு சென்னை ஐஐடியில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்கும், என்ற நம்பிக்கையில் தான் எனது மகளை அனுப்பினோம். ஆனால் எங்களுது நம்பிக்கை எல்லாம் தலைகீழாக மாறி போய்விட்டது.
ஐஐடி யில் என் மகளுக்கு தொல்லைகள் தரப்பட்டிருக்கிறது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். பேராசியர் சுதர்சன் பத்மநாபனின் தொல்லைகள் தாங்காமல் தான் அவள் இறந்து போயிருக்கிறாள். படிப்பில் எனது மகள் நல்ல ஆர்வத்தோடு தான் இருந்தாள். அது எனது மகளுடன் படித்த அனைவருக்கும் தெரியும். பாத்திமாவுக்கு தெரிந்தது எல்லாம் வகுப்பறை, விடுதி, நூலகம், மற்றும் உணவகம் மட்டும் தான். அவள் வேறு எங்கும் சென்றது இல்லை.
சுடிதார் பேண்டின் கயிறினை கூட எனது மகளுக்கு கட்ட தெரியாது. அது அவளுக்கு இறுக்கி வலியை உண்டாக்கும் என கூறுவாள். ஆனால் அவளது கழுத்தை தூக்கு கயிறு எப்படி நெரித்து, அதனை பாத்திமா எப்படி தாங்கி கொண்டாள் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. நாங்கள் நிச்சயம் எனது மகளுக்கு நீதியை பெற்றே தீருவோம். இனியொரு பாத்திமாவை யாரும் இழக்க கூடாது என வேதனை பொங்க தெரிவித்துள்ளார்.