'ஃபாத்திமாவைத் தொடர்ந்து ஜெப்ரா பர்வீன்!'.. 'திருச்சி' கல்லூரியில் 'வெளிமாநில' மாணவிக்கு நேர்ந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Nov 15, 2019 11:22 AM

சென்னை ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சோகம் அடங்குவதற்குள் திருச்சியில் ஜார்க்கண்ட் மாநில மாணவி ஜெப்ரா பர்வீன் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பதற வைத்துள்ளது.

other state girl from trichy college commits suicide

திருச்சி கே.கே.நகரில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வெளிமாநில மாணவிகளும் தங்கி படித்து வரும் நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த ஜெப்ரா பர்வீன், கல்லூரி வளாக விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு அறிவியல் பாடப்பிரிவின் கீழ் உணவியல் துறையில் பயின்று வந்துள்ளார். இவர் திடீரென தான் தங்கியிருந்த அறை எண் 100ல் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதுபற்றி போலீஸாருக்கு தகவல் கொடுத்த கல்லூரி நிர்வாகம், மாணவி ஜெப்ரா பள்ளிக்கல்வியை இந்தியிலும், கல்லூரி படிப்பை ஆங்கிலத்திலும் பயில்வதால் சிரமத்தை அனுபவித்ததால் தற்கொலை செய்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

ஆனால் அதே சமயம், கல்லூரியில் செல்போன் பயன்படுத்த தடை இருப்பதாகவும், வெளிமாநில மாணவி ஜெப்ரா தனது வீட்டாருடன் தொடர்புகொள்ள செல்போன் அவசியமானதாக இருந்ததாகவும், இதனை ஜெப்ரோவின் அறைத்தோழி வார்டனிடம் சொல்லிவிட்டதால், அவர் ஜெப்ராவை அழைத்து மற்ற மாணவிகள் முன்னிலையில் கடுமையாக பேசியதால் மன உளைச்சலுக்கு ஆளானதாக ஜெப்ரா தன்னுடைய தோழியான ஜார்க்கண்ட் மாநிலத்து மாணவி ஆதிபாவிடம் கூறி அழுததாகவும் மாணவிகள் ஊடகங்களிடம் கூறியதாகத் தெரிகிறது.

எனினும் முழுமையான விசாரணைக்கு பிறகே மாணவி ஜெப்ராவின் தற்கொலைக்கான காரணம் தெரியவரும். மாணவியின் பெற்றோர் வரவழைக்கப்பட்ட பின்னர் அவர்கள் மகளின் நிலை கண்டு கதறி அழுதுள்ளனர்.

தற்கொலை எதற்கும் முடிவாகாது. மனித உயிரும் அதன் ஆற்றலும் விலைமதிக்கமுடியாதது என்பதை தற்கொலை நிலைக்குச் சென்று திரும்பிய பலரும் உணர்ந்து தற்போது வாழ்வில் உயர்ந்த நிலைக்குச் சென்றுள்ளனர். தற்கொலை எண்ணம் மேலெழும்போது அதில் இருந்து மீள சினேஹா தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் போன்றவை ஆலோசனை வழங்குகின்றன. அவர்களைத் தொடர்புகொள்ள..

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)