‘என் நிலைமை யாருக்கும் வரக்கூடாது’! ‘படிக்கவே பிடிக்கல..!’ ஃபினாயில் குடித்த கல்லூரி மாணவி..! சிக்கிய உருக்கமான கடிதம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Nov 19, 2019 10:01 PM

திருச்சியில் கல்லூரி மாணவி ஃபினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trichy College female students suicide attempt

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஜெப்ரா பர்வின் என்ற மாணவி, திருச்சி கே.கே.நகரில் உள்ள அய்மான் மகளிர் கலை அறிவியல் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 14ம் தேதி மாணவி தூக்கிட்டி தற்கொலை செய்துகொண்டார். பள்ளி படிப்பு வரை இந்தி வழியில் பயின்ற அவர், ஆங்கில மொழிவழியில் பாடங்களை புரிந்துகொள்ள சிரமப்பட்டதாகவும், அதனால் தற்கொலை செய்துகொண்டதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது.

ஆனால் அவருடன் படிக்கும் சக மாணவிகள், கல்லூரி பேராசிரியர்கள் கொடுத்த டார்சர் காரணமாகவே ஜெப்ரா பர்வின் தற்கொலை செய்துகொண்டதாக குற்றம் சாட்டினர். மேலும் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்திலேயே மாணவிகள் போராட்டம் நடத்தனர்.

அதேபோல் திருச்சி பாரதிதாசன் பல்கலைகழக மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுதி அறையில் மாணவி மயங்கி கிடந்துள்ளார். இதனைப் பார்த்த சக மாணவிகள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவ பரிசோதனையில் அவர் ஃபினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது. மாணவிக்கு தொடந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் மாணவி தற்கொலை முயற்சிக்கு முன் எழுதிய கடிதம் ஒன்றை கைப்பற்றியுள்ளனர். அதில், ‘நான் உங்களை விட்டு போகிறேன். நம்ம துறைத் தலைவரை (HOD) எதிர்த்து யாராலையும் ஒண்ணும் பண்ண முடியாது. அவர் வகுப்பு மாணவர்களிடம் பேசுவதை தவறாக சித்தரிக்கிறார். என்னோட நிலைமை யாருக்கும் வரக்கூடாது. நான் போன பிறகாவது அவர் மாறுவாரா என பார்க்கலாம். நீங்க சந்தோஷமாக இருக்கணும். அதற்கு நான் உயிரிழக்கிறேன். எனக்கு படிக்க பிடிக்கவில்லை. கிளாஸுக்கு வரும்போது பயந்தபடியே வரவேண்டி உள்ளது’ என இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு சென்னை ஐஐடி-யில் மாணவி பாத்திமா தற்கொலை செய்துகொண்ட நிலையில் திருச்சியில் கல்லூரி மாணவி ஃபினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News Credits: Vikatan