கணவர் வெளிநாட்டில்.. 'மைனர் தோழிக்கு திருமணம் செய்துவைத்த பள்ளி மாணவியின் சோக முடிவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Nov 08, 2019 11:22 AM

கள்ளக்குறிச்சி அருகே தன்னுடன் பள்ளியில் படிக்கும் சக தோழியின் காதலுக்கு உதவிய பெண் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

School girl gets minor girl married with lover, commits suicide

கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஓகையூரில் 12-ஆம் வகுப்பு பயின்று வந்த அன்பு என்கிற மாணவிக்கு, கடந்த 5 மாதங்களுக்கு முன்பு புக்கிரவாரி கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீசனை, அன்புவின் பெற்றோர் ராஜ மாணிக்கம் மற்றும் கருப்பாயி தம்பதியினர் கட்டாய திருமணம் செய்துவைத்தனர். 

திருமணம் முடிந்த அடுத்த வாரமே ஜெகதீசன் சிங்கப்பூர் சென்றுவிட, தனது தாய்வீட்டில் இருந்து தாலியுடன் பள்ளிக்குச் சென்று வரத் தொடங்கிய அன்பு, தற்போது திடீரென வாயில் நுரை தள்ளி மயங்கி கிடந்துள்ளார். அவரை மருத்துவமனை கொண்டு சென்றபோது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

இதுகுறித்து விசாரித்ததில், அன்புவின் தோழியும் புக்கிரவாரியைச் சேர்ந்த தீனா இளைஞரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்துகொள்ள அன்புவின் உதவியை வேண்டியுள்ளனர். ஆனால் திருமண வாழ்க்கையில் அனுபவம் இல்லாத அன்பு தன்னுடைய இன்னொரு தோழியையும் அழைத்துக்கொண்டு, காதல் தம்பதிகளுடன் சேர்ந்து ஒரே பைக்கில் 4 பேராக கல்வராயன் மலை கோவிலுக்கு சென்றுள்ளார். 

அங்கு சென்று தினாவுக்கும் அவரது காதலிக்கும் திருமணம் செய்துவைத்துள்ளார் அன்பு. இதனையடுத்து அந்த தம்பதிகள் தலைமறைவாகிவிட,  தனது தோழியுடன் வீடு திரும்பியுள்ளார் அன்பு. ஆனால் பள்ளி சென்ற தனது 18 வயது கூட நிரம்பாத மகள் வீடு திரும்பவில்லையே என்று திருமணப் பெண்ணின் தந்தை கேசவன் பள்ளிக்கு சென்று விசாரித்துள்ளார். 

அன்புவுடன் தனது மகள் வெளியே சென்றதாகக் கேள்விப்பட்ட தந்தை கேசவன், அன்புவின் வீடு தேடிவந்து அன்புவிடம் தனது மகளை காணவில்லை , உன் மீது புகார் அளிக்கிறேன் என்று கூறிவிட்டுச் சென்றுள்ளார். இதனால் குற்றவுணர்ச்சியும் பயமும் கொண்ட அன்பு பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

Tags : #SUICIDEATTEMPT #SCHOOLSTUDENT #LOVE #GIRL