‘தொழிலதிபர் வீட்டில் திருட வந்த’... ‘இளைஞருக்கு மனம் மாறியதால்’... 'கடைசியில் நிகழ்ந்த பரிதாபம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மும்பையில் தொழிலதிபரின் வீட்டிற்குள் புகுந்த திருடனுக்கு தோன்றிய நப்பாசையால் கடைசியில் திருடாமல் மாட்டிக்கொண்டு அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து மும்பை மிரர் வெளியிட்டுள்ள செய்தியில், மும்பையில் கிரிகுஞ்ச் அப்பார்ட்மென்டில் சொந்தமாக பிளாட் வைத்திருப்பவர் சித்தாந்த் சாபூ. அவர் அதே அப்பார்ட்மென்டின் 3-வது மாடியில் மற்றொரு பிளாட்டை வாங்கியுள்ளார். தனது புதிய பிளாட்டிற்கு வீட்டிலிருக்கும் பாதி பொருட்களை மாற்றியுள்ளார். மீதி பொருட்களுடன் பழைய பிளாட்லேயே வசித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரவு ஆட்கள் இல்லாத புதிய பிளாட்டில் விலை உயர்ந்த பொருட்களை திருட திட்டமிட்ட சஞ்சீவ் என்ற 19 வயது இளைஞர், பால்கனி வழியாக உள்ளே நுழைந்துள்ளார். அங்குள்ள அலமாரியை உடைத்த அவர், அருகில் இருந்த பிரிட்ஜை திறந்துப் பார்த்துள்ளார். அதில் இருந்த 2 ஷாம்பெயின் பாட்டிகளை பார்த்ததும் அவருக்கு மனம் மாறியுள்ளது. இதையடுத்து அருகில் இருந்த கவுச்சில் உட்கார்ந்து ஒரு பாட்டில் முழுவதையும் குடித்துள்ளார்.
பின்னர், 2-வது பாட்டிலை குடிப்பதற்குள் போதை தலைக்கேற அப்படியே தனக்கு அருகில் கத்தியை வைத்துவிட்டு சஞ்சீவ் தூங்கியுள்ளார். அடுத்த நாள் காலை தொழிலதிபர் சாபூவின் வேலைக்காரர் ஒருவர், புதிய பிளாட்டில் லைட் எரிவதைக் கண்டதும் அதை அணைக்க போயுள்ளார். அப்போது கதவு உள்பக்கம் தாழிட்டு இருக்கவே சந்தேகமடைந்த அவர், தொழிலதிபர் சாபூவிடம் கூற அவருடன் சேர்ந்து பலரும் கதவை உடைத்து உள்ளே போய் பார்த்துள்ளனர்.
அப்போது, திருட வந்த சஞ்சீவ் நன்றாக தூங்கிக்கொண்டு இருந்ததுடன், அருகில் ஷாம்பெயின் பாட்டில்கள் இருப்பதைக் கண்டதும் நிலைமையை புரிந்துக் கொண்டு உடனடியாக போலீசாருக்கு, சாபூ தகவல் தெரிவித்தார். இதன்பேரில் அங்கு வந்த போலீசார், சஞ்சீவை தூக்கத்தில் இருந்து எழுப்பியதும் தான், திருட வந்த இடத்தில் தான் மாட்டிக் கொண்டது தெரியவந்து அதிர்ச்சி அடைந்தார். சஞ்சீவை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் ஏற்கனவே, சஞ்சீவ் மீது அந்தேரி காவல்நிலையத்தில் திருட்டு வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.
