‘இதுக்கு என்ன தண்டனை? கூகுள்ல தேடியும் கிடைக்கல’... போலீசாரை பதறவைத்த ‘ஐடி’ ஊழியர்... ‘அடுத்து’ நடந்த ‘நெகிழ்ச்சி’ சம்பவம்...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Feb 03, 2020 04:30 PM

மும்பை காவல் துறையினர் தற்கொலை எண்ணத்தில் இருந்த இளைஞர் ஒருவரைக் காப்பாற்றியுள்ளனர்.

Mumbai Police Counsel IT Employee To Drop Suicide Plan

மும்பையை அடுத்த கோரெகாவ் பகுதியைச் சேர்ந்த இளைஞர் நிலேஷ் பெடேகர். ஐடி துறையில் வேலை செய்துவரும் இவர் நேற்றிரவு மும்பை காவல்துறை பக்கத்தை டேக் செய்து அதிர்ச்சி ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர், “நான் தற்கொலை செய்துகொள்ள நினைத்துக் கொண்டிருக்கிறேன். அதற்கான தண்டனை என்ன என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறேன். இதுகுறித்து விக்கிபீடியா மற்றும் கூகுளில் தேடினேன். ஆனால் சரியான பதில் கிடைக்கவில்லை” என மும்பை காவல்துறை பக்கத்தை டேக் செய்து கேட்டுள்ளார்.

இதைப் பார்த்துப் பதறிப்போன மும்பை காவல்துறையினர் உடனடியாக அவருடைய பதிவுக்கு, “நிலேஷ் பிரச்சனைகள் வாழ்க்கையின் ஒரு பகுதி. அதற்கு தற்கொலை தீர்வல்ல. காவலர்கள் உங்களுக்கான உதவிகளை வழங்குவார்கள்” எனக் கூறி அவருடைய முகவரியை வாங்கியுள்ளனர். பின்னர் வான்ராய் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஷேக் என்பவர் நிலேஷின் வீட்டிற்குச் சென்று அவருக்கு தேவையான கவுன்சிலிங்கை வழங்கி தற்கொலை எண்ணத்தை மாற்றியுள்ளார்.

இதையடுத்து மும்பை காவல்துறையினர் தனக்கு செய்த உதவி குறித்துப் பேசியுள்ள நிலேஷ், “நான் செய்த தவறுக்கு மிகவும் வருந்துகிறேன். நேற்று நான் என்னுடைய கட்டுப்பாட்டை இழந்து அப்படி செய்துவிட்டேன். வான்ராய் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஷேக்கிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர் மிகச் சிறந்த ஒரு மனிதர். எனக்கு உதவியவர்களுக்கு ஒரு மில்லியன் நன்றி சொல்லிக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ஐடி துறையில் வேலை செய்துவரும் நிலேஷ் சமீபகாலமாக மதுவுக்கு அடிமையானதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே தற்கொலை செய்து கொள்ள நினைத்ததாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து இளைஞரை தற்கொலை செய்வதில் இருந்து காப்பாற்றியதற்காக பல தரப்பிலிருந்தும் மும்பை காவல் துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றை தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.