பொங்கல் பரிசுக்கான டோக்கன் சர்ச்சை... ரூ.2500 பெறுவதில் புதிய திருப்பம்!.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Dec 30, 2020 08:37 PM

அரசு வழங்கும் அதிகாரப்பூர்வ டோக்கன்களுக்கு மட்டும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.

tamil nadu govt pongal gift 2500 rs for authorised tokens only

பொங்கல் பரிசுத் தொகையாக அரிசி அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஜனவரி 4ஆம் தேதி முதல் பரிசுத் தொகை பெறுவதற்கான டோக்கன்கள் வழங்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்த டோக்கனில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்களின் படங்கள், அதிமுக கட்சியின் சின்னம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இதனை எதிர்த்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், மக்கள் வரிப்பணத்தில் அரசு சார்பில் செயல்படுத்தப்படும் இந்தப் பொங்கல் பரிசுத் தொகை திட்டத்தில் வழங்கப்படும் டோக்கன் மூலமாக, அதிமுகவினர் சுய விளம்பரம் தேடிக்கொள்வது தேர்தல் ஆணைய அறிவிப்பாணைக்கு எதிரானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த டோக்கன்கள் ஆளும் கட்சியினர் மூலமாக வழங்கப்படுவதால் அனைத்துப் பயனாளிகளுக்கும் இந்தப் பரிசுத் தொகை போய்ச் சேராது எனவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென நீதிபதிகள் மகாதேவன் மற்றும் அனிதா சுமந்த் ஆகியோர் அமர்வில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் முறையீடு செய்தார்.

                

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் வழக்கை விசாரித்தபோது அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, தமிழகத்தில் இரு இடங்களில் மட்டுமே அதிமுக தலைவர்களின் படங்கள் இடம்பெற்ற டோக்கன் விநியோகிக்கப்பட்டதாகவும், கட்சியினர் ஆர்வ மிகுதியால் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தமிழகத்தின் மற்ற அனைத்து இடங்களிலும் அரசின் அதிகாரபூர்வ டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், பொங்கல் பரிசுக்கான அதிகாரபூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பரிசுப் பொருள் மற்றும் பரிசுத் தொகை வழங்க வேண்டுமென ரேஷன் கடைகளுக்குச் சுற்றறிக்கை அனுப்ப இருப்பதாகவும் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் தெரிவித்தார்.

அதனைப் பதிவு செய்த நீதிபதிகள், அரசு வழங்கும் அதிகாரபூர்வ டோக்கன்களைத் தவிர வேறு எந்த டோக்கனும் வழங்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளனர். அரசின் சுற்றறிக்கையை நாளை (டிச.31) மாலை 5 மணிக்குள் தமிழக அரசு வெளியிட வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

 

Tags : #PONGAL #TOKEN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Tamil nadu govt pongal gift 2500 rs for authorised tokens only | Tamil Nadu News.