பொங்கல் ‘விளையாட்டிற்காக’ நடந்த ‘கொடூரம்’... ‘பழிதீர்க்க’ சென்ற ‘நண்பர்கள்’... கோவையில் நடந்த ‘பதறவைக்கும்’ சம்பவம்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jan 20, 2020 01:53 PM

கோவையில் நண்பரைக் கொலை செய்தவர்களை பழிவாங்க முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Coimbatore Man Brutally Murdered In Fight Over Pongal Kabaddi

கோவை அம்மன் குளம் தாமு நகர் அருகே பொங்கல் விழாவை முன்னிட்டு கபடி போட்டி நடைபெற்றுள்ளது. அந்தப் போட்டியில் அதே பகுதியைச் சேர்ந்த நவீன்குமார் என்ற இளைஞர் 3 வெளியூர் கபடி வீரர்களை வைத்து விளையாடி வெற்றி பெற்றதாகக் கூறப்படுகிறது. போட்டி முடிந்ததும் இதுதொடர்பாக விஜயகுமார் என்பவர் நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து சென்று நவீன்குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது ஆத்திரமடைந்த விஜயகுமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் நவீன்குமாரைக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ராமநாதபுரம் போலீசார் விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

நவீன்குமாரை கொலை செய்தவர்களை போலீசார் ஒருபுறம் தேடிக்கொண்டிருக்க, பழிவாங்கும் நோக்கில் அவருடைய நண்பர்கள் மற்றொரு புறம் தேடிக் கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் கொலை செய்த கும்பலில் இருந்த ஒருவரான கண்ணன் என்பவர் வடவள்ளியில் இருப்பதாக நவீன்குமாரின் நண்பர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து அங்கு சென்ற அவர்கள் கண்ணனைத் தாக்கியுள்ளனர். அப்போது கொலையில் தொடர்புடைய மற்றொருவர் கெம்பட்டி காலனியில் பதுங்கியிருப்பதாகவும், அவரைக் காண்பித்து தருவதாகவும் கண்ணன் கூறியுள்ளார்.

பின்னர் அங்கு சென்றதும் கண்ணன் தப்பிக்க முயற்சிக்க, நவீன்குமாருடைய நண்பர்கள் அவரைக் கற்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். தகவலறிந்து சென்று கண்ணனை மீட்ட போலீசார் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் நவீன்குமாருடைய கொலைக்கு பழிவாங்குவதற்காக கண்ணனைக் கொலை செய்ய முயற்சித்த அவருடைய நண்பர்கள் ஷாஜின் வர்கிஸ், ராம்பிரசாத், கார்த்திக், ரஞ்சித்குமார், பிரபு ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags : #CRIME #MURDER #COIMBATORE #PONGAL #KABADDI #FRIENDS