அப்படி போடு... 'போடு'..! நாங்களும் தூக்குவோம்ல.. இளவட்டக்கல்லை தூக்கிப்போட்டு அசத்திய தமிழ்ப்பெண்கள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வீர விளையாட்டுகள் தமிழ் கலாச்சாரத்தின் அடையாளங்களாக பார்க்கப்படுகிறது. சீறிப்பாயும் காளைகளை ஜல்லிக்கட்டு போட்டியின் மூலம் அடக்குபவருக்கும், சுமார் 100 கிலோ எடை கொண்ட இளவட்டக்கல்லை தோளில் தூக்கி வீசும் வீரமிக்க ஆண்களுக்கு, பெண் கொடுக்கும் பழக்கத்தை தமிழர்கள் வீர விளையாட்டாக ஆண்டாண்டு காலமாக கடைப்பிடித்து வந்தனர். ஆனால் காலத்தின் மாற்றத்தில் இந்த விளையாட்டுகள் காண்பதற்கு அரியவையாக மாறி விட்டன.

இதையடுத்து பொங்கங்ல் பண்டிகையை முன்னிட்டு நெல்லை மாவட்டம் பணகுடி அருகே இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் 40 முதல் 100 கிலோ எடை வரையிலான இளவட்டக்கல் வைக்கப்பட்டிருந்தன. போட்டியில் இளைஞர்கள் மட்டுமின்றி பெண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இளவட்டக்கல்லை தூக்கிப்போட்டு அசத்தினர்.
கிராமத்தில் உள்ள சிறுவர்கள், சிறுவயது முதலே இளவட்டக்கல்லை தூக்கப் பயிற்சி பெற்று, இளைஞர் பருவம் வரும் காலத்தில் இளவட்டக்கல்லை இலகுவாக தூக்கி வருகின்றனர். தமிழர்களின் பாரம்பரியம் மிக்க இது போன்ற விளையாட்டுகளை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு சேர்ப்பதே எங்களின் முதல் பணியாகும் என்று கூறுகின்றனர் அந்த கிராமத்து இளைஞர்கள்.
