அரச மரத்துக்கு பட்டு வேட்டி கட்டி... வேப்ப மரத்துக்கு பட்டுப் புடவை உடுத்தி... மேள தாளத்துடன் டும் டும் டும்!.. திருமண விருந்து வைத்து அசத்திய பொதுமக்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோயம்புத்தூரில் உலக நன்மைக்காக 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான அரசமரத்திற்கும் வேப்பமரத்திற்கும் கிராம மக்கள் வெகு விமர்சையாக திருமணம் செய்து வைத்து வழிபட்டனர்.
பண்டைய காலத்தில் இருந்தே நம் முன்னோர்கள் மரங்களைத் தெய்வமாக வழிபட்டனர். அதன் வெளிப்பாடாகவே பண்டைய காலத்து மன்னர்கள் தங்கள் கோட்டையில் காவல் மரங்களை நட்டு வழிபட்டனர். இந்துக்களின் வழிபாட்டில் வேம்பு, ஆல், அரசு என பல மரங்களுக்கு முக்கிய இடமுண்டு. கோயில்களிலும் தல விருட்சமாக மரங்கள் இன்றளவும் வழிபடப்பட்டு வருகின்றன.
அனைத்து மரங்களை விடவும் அரச மரத்துக்கு சிறப்பு அதிகம். மரங்களின் அரசன் என்று போற்றப்படுகிறது. இதில் மும்மூர்த்திகளும் வாசம் செய்வதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. தேவலோகத்து மரம் என்றும் அரச மரத்தை ரிஷிகள் போற்றுவர்.
அரச மரமும் வேப்ப மரமும் இணைந்திருப்பது, சிவசக்தியின் வெளிப்பாடு என்கிறார்கள் ஆன்மிகப் பெரியோர்கள். அரசமரம் சிவபெருமான் என்றும், வேப்ப மரம் சக்தி எனப்படும் பார்வதி தேவி என்றும் பக்தர்களால் வணங்கப்படுகிறது. யாரும், அரச மரத்தையும் வேப்ப மரத்தையும் ஒன்றாக நட்டுவைக்க மாட்டார்கள்.
அவை, இயற்கையாகவே நதிக்கரைகள் மற்றும் சாந்நித்தியம் நிறைந்த இடங்களில் ஒன்றிணைந்து வளரும். சிவ சக்திக்கு இணையாகக் கருதப்படும் அரச மரம் - வேம்பு மரத்தடியில் முருகன், பிள்ளையாரைப் பிரதிஷ்டை செய்து வழிபடுவது பாரம்பரியமாகும்.
இந்த சூழலில் தான் கோவை, துடியலூரை அடுத்த அப்பநாயக்கன்பாளையம் கிராமத்தில் தானாகவே வளர்ந்த அரச மரம், வேப்ப மரத்துக்குத் திருமணம் செய்து வழிபட்டுள்ளனர் கிராம மக்கள்.
அப்பநாயக்கன்பாளையம் கிராமத்தில் நூறாண்டுகள் பழமையான கருப்பராயன் கோயில் உள்ளது. கிராம மக்களின் குல தெய்வமாக வழிபடப்படும் கருப்பராயனுக்கு ஒவ்வொரு ஆண்டும் மக்கள் பூஜை செய்து விழா எடுப்பது வழக்கம். இந்தக் கோயிலில் 100 ஆண்டுகளுக்கு மேலான அரச மரமும், வேப்ப மரமும் உள்ளன. இவை தான் தல விருட்சமாக கிராம மக்களால் வழிபடப்படுகிறது.
இந்த நிலையில், உலக நன்மைக்காக வேப்பமரத்தை சக்தியாகவும், அரச மரத்தை சிவமாகவும் பாவித்து, இரண்டிற்கும் திருமணம் செய்து வைக்கக் கிராம மக்கள் முடிவு செய்தனர்.
இந்தத் திருமணத்துக்குக் கிராம மக்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்து, அரச மரத்துக்குப் பட்டு வேட்டியும், வேப்ப மரத்துக்குப் பட்டுப் புடவையும் உடுத்தி, மலர் மாலை அணிவித்தனர்.
முறைப்படி, புரோகிதர்களை வரவழைத்து யாக குண்டம் வளர்த்து, வேத மந்திரங்கள் ஓதினர். மூன்று தம்பதிகளை வைத்து கன்னிகா தானம் செய்யப்பட்டது. தொடர்ந்து தங்கத்தால் ஆன தாலியினை மஞ்சல் கயிற்றில் கோர்த்து திருமணத்திற்கு வந்திருந்த அனைவரிடமும் ஆசிர்வாதம் பெற்று, 3 பெண்கள் இணைந்து இரண்டு மரங்களை மஞ்சள் சுற்றிக் கட்டி மூன்று முடிச்சு போட்டு தாலி கட்டினர்.
இந்து பாரம்பரிய முறைப்படி அனைத்து திருமண சடங்குகளுடன் நடைபெற்ற இந்த புதுமையான திருமணத்திற்கு வந்திருந்த பெண்களுக்கு வளையல் மற்றும் மஞ்சள் கயிறு கொடுக்கப்பட்டது.
மேலும், திருமணத்துக்கு வந்த அனைவருக்கும் திருமண விருந்தும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதுமையாக, சிவ - சக்தி அடையாளமான அரச மரம் மற்றும் வேப்ப மரத்துக்கு இடையே நடைபெற்ற திருமணத்தை அந்தப் பகுதி மக்கள் ஆச்சரியமாகவும், பக்தியுடனும் கண்டுகளித்தனர்.