'வீடியோ காலில் ஜாலியா பேசிட்டு இருந்தாரு'...'திடீரென கதறி துடித்த கணவன்'...நடந்து முடிந்த சோகம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Jeno | Dec 05, 2019 04:22 PM
வீடியோ காலில் பேசிக்கொண்டிருக்கும் போதே தனது கணவர் தீயில் சிக்கி இறந்து போனதாக பெண் ஒருவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
சூடான் நாட்டின் தலைநகரான கார்டோமின் பஹிர் தொழில்பேட்டை பகுதியில் கண்ணாடி துகள்களை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்படும் செராமிக் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் 50-க்கும் அதிகமான இந்தியர்களும் வேலை செய்து வந்தனர். இந்த தொழிற்சாலையில் நேற்று வழக்கம்போல தொழிலாளர்கள் தங்கள் பணிகளை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த தொழிற்சாலை வளாகத்திற்குள் நின்று கொண்டிருந்த எரிபொருள் நிரம்பிய டேங்கர் லாரி திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அதிலிருந்து பரவிய தீ மளமளவென தொழிற்சாலை முழுவதும் வேகமாக பரவியது. இந்த கோர தீ விபத்தில் சிக்கி 23 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 130-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் சிக்கியவர்களில் 18 பேர் இந்தியர்கள் எனவும், அவர்கள் உயிரிழந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே இந்த கோர விபத்தில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த, ராஜசேகர் என்பவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திருமணமான இருவருக்கு 3 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இதனிடையே கணவரின் எதிர்பாராத மரணம் அவரது மனைவி கலைசுந்தரியை நிலைகுலைய செய்துள்ளது. சம்பவத்தன்று சூடானில் வேலைபார்த்து கொண்டிருந்த ராஜசேகர் மனைவியிடம் வீடியோ காலில் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.
அப்போது குழந்தையை பற்றி விசாரித்து கொண்டு, மகிழ்ச்சியாக இருவரும் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அந்த நேரத்தில் ராஜசேகர் பின்னால் தீப்பிழம்பு ஏற்பட்டது. இதை பார்த்து கலைசுந்தரி அதிர்ச்சியில் உறைந்து போனார். அப்போது ராஜசேகரின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அடுத்த சில நொடிகளில் வீடியோ காலும் துண்டிக்கப்பட்டது. மீண்டும் அவருடன் கலைசுந்தரி பேச முற்பட்டபோது, சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் பதறி போன அவர், உறவினர்கள் மூலமாக இந்திய தூதரகத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின்பு வந்த தகவலில் ராஜசேகர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கணவனும், மனைவியும் வீடியோ காலில் இருக்கும் போதே தீ விபத்தில் சிக்கி கணவன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.