‘புது வீடு குடியேற போனபோது’... ‘கண் இமைக்கும் நேரத்தில்’... ‘சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் பலி’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Dec 03, 2019 10:56 AM
லாரி - காா் நேருக்கு நோ் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த சப்- இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள விநாயகாபுரத்தை சேர்ந்தவர் செல்வம் (39). இவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புதுக்குய்யனூரில் உள்ள தமிழ்நாடு அதிரடிப்படை முகாமில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி தேவஸ்ரீ (38). இவர்களுக்கு ஜனனி (6) என்ற பெண் குழந்தை இருந்தது. சப் இன்ஸ்பெக்டர் செல்வம், தனது குடும்பத்துடன் சத்தியமங்கலம்-மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே தங்கியிருந்தார்.
இந்நிலையில் செல்வம் சத்தியமங்கலம் அருகே, வடவள்ளியில் வாடகைக்கு வீடு பார்த்திருந்தார். இதனால், புதிய வீட்டிற்கு பொருட்களை எடுத்து செல்வதற்காக, கடந்த திங்கள்கிழமை அன்று மாலை 5 மணி அளவில், அந்தப் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான முருகேசன் (26) என்பவரை காரில் அழைத்துக் கொண்டு சென்றார். அப்போது புதுவடவள்ளி என்ற இடத்தில் ஆட்டுக்குட்டி மீது மோதாமல் இருக்க காரை திருப்பியபோது, எதிரே மைசூரில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்த லாரி மீது மோதியது.
இதில், காரின் முகப்பு பகுதி சேதமடைந்தது. இதில் எஸ்.ஐ. குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த முருகேசன் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.