‘எனக்கு இத மட்டும் தந்தீங்கனா’... ‘எங்க அம்மாவ நா காப்பாத்தி உட்ருவேன்’... தந்தையை இழந்த சிறுமியின் உருக்கமான வார்த்தை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Dec 03, 2019 08:08 PM

கோவையை அடுத்த மேட்டுப்பாளையத்தில் கனமழையில், சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில், தந்தையை இழந்த சிறுமியின் உருக்கமான வார்த்தைகள் கண்ணீரை வர வழைத்துள்ளது.

10 year old girl need help in mettupalayam accident

தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் கிராமத்தில், ஏ.டி. காலனியில் இருக்கும் குடியிருப்பின் பின்பக்க காம்பவுண்டு சுவர், திடீரென கடந்த திங்கள் கிழமையன்று அதிகாலை 3.30 மணியளவில் இடிந்து விழுந்தது. அந்த சுவர் 4  ஓட்டு வீடுகளின்  மீது  வரிசையாக விழுந்தது. இதில் அங்கு தூங்கி கொண்டிருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். அவர்கள்  சுதாரித்து எழுவதற்குள், வீட்டின் சுவர் விழுந்து அமுக்கியது.

இதில் குழந்தைகள் உள்பட 17 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவத்தில் வீடு உடைமைகள் இழந்தவர்கள், கண்ணீருடன் தவித்து வருகின்றனர். இந்நிலையில், கணவனை இழந்த இளம்பெண் ஒருவர், செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘தனது குழந்தைகளுடன் ஆதரவின்றி தவித்து வருகிறேன். பக்கத்துக்கு வீட்டில்தான் தற்போது தங்கியுள்ளோம். 

அவர்தான் (கணவர்) ஆதரவாக இருந்தார். அவரும் போய்ட்டார். இப்பொழுது வீடு வாசல் மட்டுமில்லாமல், குழந்தைகளின் படிப்பு வரை எல்லாமே போயிருச்சு. மாத்து துணிகூட இல்லை. பாத்திரப் பண்டம், ஆதார் கார்டு என எல்லாமே போயிருச்சு எங்கள் உயிர் மட்டும்தான் இருக்கு’ என கண்ணீருடன் கூறினார். அதன்பின்னர் அந்த தாயின் மகளான, 5- வகுப்பு படித்து வரும் சிறுமி அழுதுகொண்டே 'எனக்கு புக்கும் நோட்டும் துணிமணியும் தந்தீங்கனா, எங்க அம்மாவ காப்பாத்தி விட்ருவேன்.

எங்கப்பாதான் மேல போயிட்டாரு' என கண்ணீருடன் அழுத்தபடி கூறியது அங்குள்ளவர்களை மட்டுமின்றி பார்ப்பவர்களுக்கும் மனவேதனையை ஏற்படுத்தியது. விஷேசத்திற்காக இவர்கள் அனைவரும் வெளியூர் சென்றநிலையில், சிறுமியின் தந்தை மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அதனால், இவர்கள் மட்டும் இந்த கோர சம்பவத்தில் தப்பியுள்ளனர்.

Tags : #ACCIDENT #SMALL #GIRL