‘9 வருட போராட்டத்திற்கு பின்’.. ‘தாயைக் கண்டுபிடித்த இளம்பெண்’.. ‘ஆனாலும் நிறைவேறாத ஆசை’..
முகப்பு > செய்திகள் > உலகம்By Saranya | Nov 05, 2019 03:42 PM
இத்தாலியைச் சேர்ந்த நவ்யா என்ற இந்திய வம்சாவளிப் பெண் 9 வருட போராட்டத்திற்கு பின் தன் தாயைக் கண்டுபிடித்துள்ளார்.
கேரளாவின் கோழிக்கோட்டில் 1984ஆம் ஆண்டு பிறந்த நவ்யாவை அவருடைய தாய் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்துவிட்டுச் சென்றுள்ளார். இரண்டரை வயது வரை வயநாட்டில் உள்ள ஒரு இல்லத்தில் வளர்ந்த நவ்யா, அங்கு சுற்றுலா வந்த ஒரு இத்தாலிய தம்பதியால் தத்தெடுக்கப்பட்டுள்ளார். பின்னர் இத்தாலி அழைத்துச் செல்லப்பட்டு அங்கு வளர்ந்த நவ்யா, சில வருடங்கள் கழித்து தன் பெற்றோரின் வெளிர் நிறத்தை தான் பெறவில்லை என உணர்ந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து பெற்றோரிடம் இதுகுறித்து அவர் கேட்க, தன் பிறந்த ஊர் பற்றியும், தத்தெடுக்கப்பட்டது பற்றியும் அவருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து 9 ஆண்டுகளுக்கு முன் கேரளா வந்து தன் தாயைத் தேடிய நவ்யாவால் அவரைக் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது. ஆனாலும் அவர் முயற்சியை கைவிடாமல் தனது சிறுவயது புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு தன் நிலை குறித்து கூறி தாயை தீவிரமாகத் தேடியுள்ளார்.
இந்த செய்தி ஊடகங்களில் பரவியதை அடுத்து தற்போது அவருடைய 9 வருட போராட்டத்திற்கு பலன் கிடைத்துள்ளது. தாயைக் கண்டுபிடித்த நவ்யாவிற்கு தன் தாய்க்கு தான் திருமணத்திற்கு முன்பாக பிறந்ததும், தற்போது அவர் தனது கணவர், குழந்தைகள் என வேறு ஒரு குடும்ப வாழ்க்கையில் உள்ளதும் தெரியவந்துள்ளது. பின்னர் தாயை தொடர்புகொண்ட நவ்யாவிடம், தனக்கு இதனால் எந்தவித பிரச்சனையும் வரக்கூடாது என உறுதிமொழி வாங்கிய பிறகே அவர் ஃபோனில் பேசியுள்ளார்.
தாயுடன் பேசிய மகிழ்ச்சியில் இதுபற்றிப் பேசியுள்ள நவ்யா, “திருமணத்திற்கு முன் என் அம்மாவுக்கு ஒரு குழந்தை பிறந்தது அனைவருக்கும் தெரியவந்தால் அது அவருக்கு கஷ்டங்களை மட்டுமே ஏற்படுத்தும். நான் விரைவில் கேரளா வருவேன். ஆனால் என் அம்மாவைப் பார்ப்பதற்காக இல்லை. என் அம்மாவைக் கண்டுபிடிக்க உதவியவர்களைப் பார்ப்பதற்காக வருவேன்” எனக் கூறியுள்ளார். தன் தாயைக் கண்டுபிடித்ததும் அவரை இத்தாலி அழைத்துச் செல்ல வேண்டுமென நினைத்திருந்த நவ்யா தற்போது அவர் கேரளாவிலேயே திருப்திகரமாக இருப்பதால் தன் ஆசையை மாற்றிக்கொண்டுள்ளார்.