தஷ்வந்தின் தூக்கு தண்டனை மீதான மனு: சுப்ரீம் கோர்ட்டின் பரபரப்பு தீர்ப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Apr 08, 2019 03:45 PM
கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 5-ஆம் தேதி சென்னை மாங்காடு அருகே நிகழ்ந்தது ஒரு கோரமான சம்பவம்.
சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்து தஷ்வந்த் என்கிற இளைஞர் அச்சிறுமியை எரித்துக் கொன்றார் என்கிற தகவல் தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்த கோரமான சம்பவத்துக்கு பிறகு குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்ட துஷ்வந்த் முதலில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமினில் வெளிவந்து தனது தாயை கொலை செய்துவிட்டு மும்பைக்கு தப்பியோடிய தஷ்வந்தினை அதே வருடம் டிசம்பர் 6-ஆம் தேதி மும்பையில் வைத்து தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
அதன் பின்னர் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து சிறுமி பாலியல் மற்றும் கொலை வழக்கில் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 10-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் மறுவிசாரணை செய்து, தஷ்வந்தின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. இந்த நிலையில், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தஷ்வந்தின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு விசாரணை செய்தது.
அதன்படி, தஷ்வந்த் குற்றவாளி என்பதை ஏற்பதாகவும், அதே சமயம், தஷ்வந்த்துக்கு ஆயுள் தண்டனையாக இல்லாமல், தூக்கு தண்டனை அளிக்கப்பட்டதால் இம்மனு பரிசீலிக்கப்படுவதாகவும், பிரிவு 302-ன்படி கொலைக் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை சரிதானா என கேள்வி எழுப்பியதாகவும் கூறப்படுகிறது. எனினும் இந்த வழக்கில் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ள உச்சநீதிமன்றம், அதுவரை தஷ்வந்தின் தூக்குதண்டனைக்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும், தேதி குறிப்பிடாமல் இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுமுள்ளது.