‘காதல் திருமணம் செய்த சில மணிநேரத்தில்’... ‘புதுமணத் தம்பதியருக்கு நேர்ந்த சோகம்’... ‘சேலம் அருகே நடந்த பரபரப்பு’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்துகொண்ட புதுமணத் தம்பதியரை, பெண்ணின் வீட்டாரே தாக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள குருப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் இளமதி (23). இவரும், அந்தியூர் அருகே உள்ள கவுந்தப்பாடியைச் சேர்ந்த செல்வன் (26) என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களுடைய காதல் விவகாரம் இருவரின் பெற்றோருக்கும் தெரிய வந்தது. அவர்கள் இருவரும் வெவ்வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இரண்டு வீட்டார் தரப்பிலிருந்துமே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் எதிர்ப்பை மீறி, காவலாண்டியூரில் உள்ள பெரியார் படிப்பகத்தில் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர்.
புதுமண தம்பதியரான இருவரும் ஈஸ்வரன் என்பவரின் வீட்டில் தங்கிவிட்டு பின்னர் வேறு இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது திடீரென வந்த ஒரு கும்பல், ஈஸ்வரனை தாக்கி புதுமண தம்பதி குறித்து கேட்டுள்ளனர். பின்னர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த செல்வனையும் இளமதியையும் தாக்கியதோடு அவர்களையும் காரில் ஏற்றிக் கொண்டு கிளம்பினர்.
இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர். அப்போது இளமதியின் தந்தை உள்ளிட்டோர் இந்த கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. அரசு பள்ளி ஒன்றில் புதுமண தம்பதியரை சிறை வைத்திருந்ததாக வந்த தகவலை தொடர்ந்து அவர்கள் மீட்கப்பட்டனர். கடத்தலில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
