'என் புருஷனுக்கு யாரும் வேல குடுக்கல, அதுனால தான்' ... பேரனின் மருத்துவ செலவிற்கு வேண்டி ... வயதான தம்பதிகளின் நெஞ்சை உருக்கும் நிலை

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | Mar 09, 2020 06:49 PM

தனது பேரனின் மருத்துவ செலவிற்காக வயதான தம்பதியர் பிச்சை எடுத்து வரும் சம்பவம் காண்போரை கண் கலங்க வைத்துள்ளது.

An Old couple becomes beggar for their grand child

சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்த நடராஜ், சரஸ்வதி ஆகியோர் வயதான தம்பதியர்கள் ஆவர். இவர்களின் கடைசி மகன் லோகநாதன் மற்றும் அவரது மனைவி பிரியா ஆகியோர் விபத்தில் இறந்து விட்டனர். விபத்தில் தூக்கி வீசப்பட்ட பேரக் குழந்தை முதுகுத் தண்டுவடம் உடைந்து படுத்த படுக்கையாக உள்ளார். பேரனின் மருத்துவ செலவு மற்றும் கல்வி செலவுக்காக நடராஜ் மற்றும் சரஸ்வதி ஆகியோர் சேலம் கலெக்டரை நாடி வந்தனர்.

அப்போது இது குறித்து பேசிய சரஸ்வதி, 'நானும் என் கணவரும் அறுபது வயதை தாண்டி விட்டோம். எங்களுக்கு இரண்டு மகன் மற்றும் ஒரு மகள். இதில் இளைய மகன் லோகநாதன் மற்றும் அவரது மனைவி ஒரு விபத்தில் இறந்து விட, அந்த விபத்தில் பேரனுக்கு விபத்தில் முதுகு தண்டுவடம் உடைந்து விட்டது. இரண்டரை வயதில் அவனுக்கு இந்த விபத்து ஏற்பட்டு தற்போது ஐந்து வயதாகியும் அவனால் எழுந்து நடக்க முடியவில்லை. நாங்கள் போகாத மருத்துவமனைகள் இல்லை. பேரனை வேறு யாருக்கு கொடுக்கவும் மனசு இல்லை' என்று வேதனையுடன் தெரிவித்தார்.

மேலும் சரஸ்வதி இது குறித்து கூறுகையில், 'எங்களது மூத்த மகன் மது பழக்கத்திற்கு அடிமையானவன். அவன் எங்களது வீட்டிற்கு வருவதே இல்லை. இதுவரை எனது கணவர் வேலை செய்து வந்த காசில் வைத்தியம் பார்த்தோம். வயதாகி விட்டதால் அவருக்கு காது சரி வர கேட்பதில்லை. இதை காரணம் காட்டி அவருக்கு யாரும் வேலை கொடுப்பதில்லை. இதனால் பிச்சை எடுத்து என் பேரனின் மருத்துவ செலவை பார்த்து வருகிறோம். எனது பேரனின் மருத்துவம் மற்றும் படிப்பு செலவுக்கு கலெக்டரிடம் உதவி கேட்டால் நிச்சயம் கிடைக்கும் என சொன்னார்கள். அதனால் இங்கு வந்துள்ளோம்' என மிகவும் வருத்தத்துடன் கூறினார்.

வறுமையில் இருந்த போதும் தனது பேரனை யாரிடமும் கொடுக்காமல் பிச்சை எடுத்து பேரனின் மருத்துவ செலவை கவனித்து வரும் வயதான தம்பதியருக்கு உதவிகள் கிடைக்க வேண்டும் என்பதே இங்கு பல பேரின் எதிர்பார்ப்பு.

Tags : #SALEM #OLD COUPLE #TAMILNADU