‘காதல் விவகாரத்தில்’... ‘நண்பனுக்கு உதவப்போய்’... ‘ஊர்மக்களால் இளைஞருக்கு நேர்ந்த பயங்கரம்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஒருதலைக் காதலால் இளம்பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து கடத்தப்போய், கடைசியில் உதவி செய்யப் போன நண்பன் மட்டும் பொதுமக்களிடம் மாட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், தூசூா் பகுதியைச் சோ்ந்த பிரியா (19), கல்லூரியில் படித்து கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த இளைஞா் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் ஏற்பட்ட ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்த பிரியா, சித்தப்பா நடேசன் வீட்டில் தங்கியிருந்து, நாமக்கல் கடைவீதியில் உள்ள ஜவுளிக் கடைக்கு வேலைக்கு சென்று வந்தாா். இந்நிலையில், இவர் வாரம் ஒருமுறை சேலம் அம்மா பேட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அங்கு பக்கத்து வீட்டில் வசித்து வரும் பூவராகவன்(20) என்ற ஷேர் ஆட்டோ ஓட்டுநர் அவரை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.
2 முறை காதலை தெரிவித்த போதும், பிரியா காதலிக்க மறுத்துள்ளார். ஒருதலையாக காதலித்து வந்த பூவராகவன், பிரியாவை தொடா்ந்து திருமணத்துக்கு வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு பிரியா மறுப்பு தெரிவித்த நிலையில், பூவராகவன் மற்றும் அவரது நண்பா்கள் செந்தில், குமாா் ஆகியோா் நாமக்கல்லில் வேலைக்கு செல்லும் போது பிரியாவை கடத்த திட்டமிட்டனா். இதையடுத்து, திங்கள்கிழமை காலை சேலத்தில் இருந்து ஆட்டோவில் வந்த மூவரும், வேலைக்கு சென்ற பிரியாவை நாமக்கல் அரங்கநாதா் கோயில் அருகில் வழிமறித்து கடத்த முயன்றனா்.
அப்போது அவா் கூச்சலிடவே, அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநா்கள், பொதுமக்கள் ஆகியோா் 3 பேரையும் பிடிக்க முயற்சித்தனா். இதில், பூவராகவன், செந்தில் இருவரும் தப்பியோடினா். நண்பனுக்கு உதவ வந்த குமாா் என்ற இளைஞர் மட்டும் சிக்கிக் கொள்ள பொதுமக்கள் அவரை கடுமையாகத் தாக்கினா். தகவல் அறிந்து வந்த போலீசார் காயமடைந்த குமாரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் ஆட்டோவை பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு எடுத்து சென்ற போலீசார், தப்பியோடிய பூவராகவன் மற்றும் செந்திலை தேடி வருகின்றனா். நண்பனுக்கு உதவப் போய் கடைசியில் இளைஞர் மாட்டிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
