‘திருமணமான’ 2 மாதங்களில் ‘காணாமல்போன’ மனைவி... ‘கொலை’ வழக்கில் சிறை சென்ற கணவர்... ‘7 ஆண்டுகளுக்கு’ பின் காத்திருந்த ‘வேறலெவல்’ ட்விஸ்ட்...
முகப்பு > செய்திகள் > இந்தியாமனைவி கொலை வழக்கில் சிறை சென்ற கணவர் 7 ஆண்டுகளுக்குப் பின் காதலருடன் இருந்த மனைவியை கண்டுபிடித்த சம்பவம் நடந்துள்ளது.

ஒடிசாவின் கேந்திரபாரா நகரில் உள்ள சாலியா கிராமத்தைச் சேர்ந்தவர் அபய சுடர். கடந்த 2013ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இவருக்கு இதிஸ்ரீ மொகரனா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. அதன்பிறகு 2 மாதங்கள் கழித்து இதிஸ்ரீ காணாமல் போக, அவரை பல இடங்களிலும் தேடிய அபய சுடர் மனைவியை காணவில்லையென ஏப்ரல் 20ஆம் தேதி போலீசில் புகார் அளித்துள்ளார். பின்னர் அதே ஆண்டு மே 14ஆம் தேதி இதிஸ்ரீயின் தந்தை தனது மகளை வரதட்சணை கேட்டு அவருடைய கணவர் துன்புறுத்தியதாகவும், தனது மகளை அவர்தான் கொன்று உடலை எங்கோ புதைத்து இருக்கிறார் எனவும் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அபய சுடரை கைது செய்த போலீசார் அவரை சிறைக்கு அனுப்பியுள்ளனர். ஒரு மாத சிறை தண்டனைக்கு பின் ஜாமீனில் வெளியே வந்த அபய சுடர், மனைவியை கண்டுபிடித்து தன்னை நிரபராதி என நிரூபிக்க முடிவு செய்து அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார். அப்போது தன்னுடைய மனைவி வேறு யாருடனாவது இருக்கக்கூடும் என சந்தேகித்த அபய சுடர், அவரைத் தேடி பல இடங்களுக்கு அலைந்துள்ளார். இறுதியில் பிபிளி என்ற இடத்தில் தனது காதலருடன் வசித்த மனைவியை அவர் கண்டுபிடித்துள்ளார்.
இதையடுத்து அவர் அளித்த தகவலின் அடிப்படையில், பிபிளி சென்ற போலீசார் இதிஸ்ரீ மற்றும் அவருடைய காதலர் ராஜீவ் லோச்சன் ஆகியோரைக் கைது செய்துள்ளனர். அதன்பிறகு அவர்கள் இருவரும் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு அவர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. அதில், திருமணத்திற்கு முன்பே ராஜீவை காதலித்து வந்ததாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தனது பெற்றோர் கட்டாயப்படுத்தி அபய சுடருக்கு தன்னை திருமணம் செய்து வைத்ததாகவும் இதிஸ்ரீ கூறியுள்ளார்.
இதுபற்றி பேசியுள்ள அபய சுடர், “இதிஸ்ரீயை போலீசாரால் கண்டுபிடிக்க முடியாத நிலையில், நானே தேடிக் கண்டுபிடித்துள்ளேன். இந்த 7 வருடங்களாக பல இடங்களுக்கு சென்று அவளைத் தேடினேன். இறுதியில் நான் நிரபராதி என நிரூபித்ததில் திருப்தி அடைந்தவனாக இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார். 7 ஆண்டுகளுக்கு முன் ஊரை விட்டுச் சென்ற இதிஸ்ரீ மற்றும் ராஜீவிற்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
