'சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கும் நீட் கட்டாயம்'... 'இந்த ஆண்டே தமிழகத்தில் நடைமுறை'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | May 31, 2019 02:45 PM
தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேத உள்ளிட்ட படிப்புகளுக்கும் இந்தாண்டு முதலே நீட் தேர்வு முறைப்படிதான், மாணவர் சேர்க்கை நடைபெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மருத்துவப் படிப்புகளான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய படிப்புகளுக்கு நீட் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு மருத்துவ கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டு வருகிறது. இந்த வருட சேர்க்கைக்கான நீட் தேர்வு நடந்து முடிந்து முடிவுகளுக்காக மாணவர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கு இந்த ஆண்டு முதலே நீட் மதிப்பெண் கட்டாயம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். யோகா மற்றும் நேச்சுரோபதி படிப்புகளுக்கு மட்டும் 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.
சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி ஆகிய படிப்புகளுக்கு நீட் தேர்வில் இருந்து ஒரு வருடம் தமிழகம் விலக்கு பெறப்பட்டிருந்தது. இதனால் சென்ற வருடம் 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெற்றது. இந்தநிலையில் இந்த வருடமும் 12-ம் மதிப்பெண் அடிப்படையில் சித்தா படிக்கலாம் என நினைத்து நீட் தேர்வெழுதாத மாணவர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது இந்த தகவல்.