‘பள்ளிப்படிப்பை முடிக்காத கட்டிடக்கலை நிபுணர்’.. மனைவிக்காக கட்டிய வியக்க வைக்கும் அரண்மனை!
முகப்பு > செய்திகள் > கதைகள்By Siva Sankar | May 05, 2019 02:09 PM
பள்ளிப்படிப்பு மட்டுமே முடித்த புதுச்சேரியைச் சேர்ந்த கனகவேல் என்பவர் தனது மனைவிக்காக புராண கால ராஜாக்களின் அரண்மனை போன்ற வடிவமைப்புடன் கூடிய வீடு ஒன்றை கட்டித் தந்துள்ள செய்தி பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
புதுச்சேரி அருகில் உள்ள கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த கட்டிடக்கலை நிபுணரான கனகவேல் பள்ளிப்படிப்பு மட்டுமே படித்த நிலையில், துறை சார்ந்த நிபுணத்துவம் உடையவர்களிடம் கட்டிடக்கலையை ஆழமாகக் கற்றுக்கொண்டு பின்னர் தாமாகவே ஒப்பந்ததாரராகி, வீடுகளைக் கட்டித்தரத் தொடங்கியுள்ளார்.
இவரிடம் இவரது மனைவி பானு, பேச்சுவாக்காக தனக்கு வித்தியாசமாக அரண்மனை போன்றதொரு வீடு வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாத கனகவேல், அதற்காக தம்முடைய உழைப்பைச் செலுத்தி இரண்டு ஆண்டுகாலம் கஷ்டப்பட்டு அறிவியல் நுணுக்கங்களோடு கூடிய முகலாயப் பேரரசின் அரண்மனை போன்றதொரு வீட்டினை தனது அன்பு மனைவிக்காக கட்டியுள்ளார்.
இந்த வீட்டினுள் நுழைந்தால் முதலில் எந்தப் பக்கம் நின்று பார்த்தாலும் முகப்பு தெரியும் முப்பரிமாண புத்தர் சிலை ஒன்று அனைவரையும் வரவேற்கிறது. இங்குள்ள தூண்களில் காதை வைத்து கேட்டால் பலவிதமான இசையை கேட்க முடிவதாகக் கூறியுள்ளார்.
அதோடு சந்தனம், செம்மரம் உட்பட 5 வகையான மூலிகைகள் கொண்ட அசையும் கட்டிலை வடிவமைத்துள்ளார். கன்னிமாடம், முத்தானை மண்டபம், சிவப்பு கோமேதக கல் பதிக்கப்பட்ட முப்பரிகை என பாரம்பரியமாகவும் இந்த வீட்டை உருவாக்கியுள்ளார். மனைவி மற்றும் பிள்ளைகளுக்காக இந்த வீட்டைக் கட்டியதாகக் கூறும் பள்ளிப்படிப்பை தாண்டாத கனகவேலின் இந்த வீடு பொறியிய மாணவர்கள் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாகவும் அமைந்திருப்பது சிறப்பு.