ஆம்புலன்ஸ்ல போனா எப்ப போறது? அறுவை மாற்று சிகிச்சைக்காக ட்ரோன் மூலம் பறந்த கிட்னி!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்By Siva Sankar | Apr 30, 2019 12:36 PM
சாலைகளின் நெரிசலில் சிக்காம, ஆகாய வழியில் இயக்கப் பயன்படும் அதிநவீன தொழில்நுட்பம்தான் ட்ரோன் டெக்னாலஜி. இதனை வாங்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் நிறைய விதிமுறைகளை அரசு மற்றும் காவல்துறையினர் விதித்துள்ளனர்.
பெருகி வரும் நகரக் கட்டமைப்பில் அதிக மக்கள் சாலையில் புழங்குவதால், வாகன நெருக்கடிக்கிடையில் ஆம்புலன்ஸ் ஒரு உயிரின் ஓலத்தைச் சுமந்துகொண்டு அலறினாலும் வழிகிடைப்பதில்லை. ஒருவேளை ஆம்புலன்ஸுக்கு வழி கிடைத்தால், அந்த வழியைப் பின் தொடர்ந்து 4 வாகன ஓட்டிகள் செல்வது உண்டு.
இதுபோன்ற அவசர, அத்தியாவசியத் தேவைகளுக்காக, ஆகாய மார்க்கமாக தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் பல வழிகளில் ஒரு வழியாக ட்ரோன்கள் தற்போது கையாளப்படுகின்றன. அமெரிக்காவின் பால்டிமோர் சிட்டியில் டயாலிஸிஸ் பிரச்சனையால் 8 வருடமாக பாதிக்கப்பட்டிருந்த 44 வயது பெண்மணியின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக, 31.5 மைல் தூரம் ட்ரோனை பயன்படுத்தி சிறுநீரகத்தை கொண்டு சென்றுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
முன்னதாக இதே ட்ரோனில், இந்த அறுவை சிகிச்சைக்கான ரத்தம் கொண்டு செல்லப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து முதல் முறையாக மருத்துவ ரீதியாக, உடல் உறுப்புகள் வேறொரு இடத்துக்கு எடுத்துச் செல்ல ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறை அமலுக்கு வந்தால், டிராபிக்கில் சிக்காமல், எளிதில் அவசர மருத்துவத் தேவைகள், குற்றச் செயல்களை கண்டுபிடித்தல் உள்ளிட்டவற்றுக்கும் ட்ரோன்கள் உபயோகப்படுத்தப் படலாம்.