'அவன போக சொல்லுயா..'.. ‘நான் மாற்றுத்திறனாளி சார்’.. ‘அதுக்கு?’.. கிரிக்கெட் ரசிகரின் வருத்தமான போஸ்ட்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | May 08, 2019 01:20 PM
அண்மையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் மேட்ச்சை காண வந்த மாற்றுத்திறனாளி ஒருவர், தான் போலீஸாரால் அவமதிப்பு செய்யப்பட்டதாக பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையிலான போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்தது. ஆனால் முன்னதாக இந்த போட்டியைக் காண்பதற்கென முன்பே டிக்கெட் ரிசர்வ் செய்தபடி வந்த தீபக் நாதன் எனும் மாற்றுத் திறனாளிக்கு மைதானத்தில் கார் பார்க்கிங் இல்லை என்பதால் அதிருப்தி ஏற்பட்டது.
கார் மைதானத்துக்குள் செல்ல முடியாமல் போகவே, ஏன் மைதானத்துக்குள் கார் பார்க்கிங் வசதி இல்லை என்று கேட்கும் பொருட்டு, காவல்துறையினரிடம் பேசுவதற்காக காரில் இருந்து இறங்கிச் செல்கிறார். ஆனால் அங்குள்ள கான்ஸ்டபிள் ஒருவர், காரை உள்ளே எடுத்துச் செல்ல முடியாத நிலை இருப்பதாக பொறுமையுடன் விளக்கம் அளிக்கிறார்.
ஆனால் இதனிடையே அங்கு இருந்த பணி உதவி ஆணையர், ‘அவன போக சொல்லுயா’ என்று கூறியதாகவும், பதிலுக்கு, தான் ஊனமுற்றவர் என்று கூறியதாகவும், அதைக் கேட்ட உதவி ஆணையர், ‘அதுக்கு?’ என்று கேட்டதாகவும், மீண்டும் தான் ஒரு ‘குடிமகன்’என்று சொன்னதற்கு அந்த உதவி ஆணையர், ‘எல்லாவனும்தான்’ என்று பதிலளித்ததாகவும் தீபக் நாதன் தனது பேஸ்புக்கில் பதிவிட்டு அந்த சம்பவத்தின் சில நொடிகளை வீடியோவாக பதிவிட்டுள்ளார்.
இவ்வாறு காவல்துறை தன்னை அவமதிப்பு செய்ததால், இனி எப்போதும் ஸ்டேடியத்துக்குச் சென்று கிரிக்கெட் பார்க்கப் போவதில்லை என்றும் பதிவிட்டுள்ள தீபக், தன் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பார்க்கிங் வசதியைச் செய்ய வேண்டியது பற்றி ஏன் யோசிக்கவில்லை? என்று கேட்டுள்ளார்.