'அக்னி வெயில் குறையுமா'?... வானிலை மையம் புதிய அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | May 16, 2019 03:49 PM
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில், லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழகத்தின் வளிமண்டலத்தில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் உள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும், அப்போது 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், தேனி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளியில் 5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மேலும் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், மாலை நேரத்தில் சென்னையில் லேசான மழை பெய்ய கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தென் மேற்கு பருவ மழை, இந்தாண்டு, ஐந்து நாட்கள் தாமதமாக துவங்கும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம், வெளியிட்ட அறிக்கையில், தென் மேற்கு பருவ மழை, வழக்கமாக, ஜூன் மாதம் 1-ல், கேரளாவில் துவங்கும். ஆனால், இந்த ஆண்டு, 6.-ம் தேதி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தமான் நிகோபர் தீவுகளின் தென் பகுதிகளில், சற்று முன்னதாகவே, மே மாதம் 18 அல்லது 19-ல், பருவ மழை துவங்குவதற்கான சூழ்நிலை நிலவுகிறது. கடந்த 2017-ல் சற்று முன்னதாகவே மே 30-லேயே பருவ மழை துவங்கியது. இந்த ஆண்டு பருவ மழை, 96 சதவீதம் பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.