பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்த 'நெல் ஜெயராமன்'... சிறப்பித்த தமிழக அரசு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | May 29, 2019 12:07 PM

பாரம்பரிய நெல் ரகங்களை காக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த நெல் ஜெயராமன் பற்றிய விவரங்கள், 12-ம் வகுப்பு தாவரவியல் புத்தகத்தில் பாடமாக தமிழக அரசு சேர்த்துள்ளது.

natural farmer nel jayaraman in the 12th std textbook

2019-20 கல்வியாண்டில் 10 மற்றும் 12-ம்  வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நெல் ஜெயராமன் குறித்த விவரங்கள் 12-ம் வகுப்பு பாட புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.  திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கட்டுமேடு கிராமத்தை சேர்ந்தவர்  விவசாயி நெல் ஜெயராமன். இவர் அழிவின் விளிம்பில் இருந்த பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்தவர். இயற்கை வேளாண் விஞ்ஞானியான நம்மாழ்வாரின் சீடரான இவர், சுமார் 174 அறிய நெல் வகைகளை பாதுகாத்தவர்.

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழகத்தின் பாரம்பரிய நெல் ரகங்களை தேடித் தேடி சேகரித்து பாதுகாத்தார். பாரம்பரிய நெல் வகைகளை காப்பாற்றியதற்காக மாநில மற்றும் தேசிய விருதுகளை இவர் பெற்றிருக்கிறார். ஆண்டுதோறும் நெல் திருவிழா நடத்தி பாரம்பரிய நெல் விதைகள் குறித்து மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கடந்த சில ஆண்டுகளாக ஜெயராமன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6-ம் தேதி அதிகாலை 5 மணியளவில் நெல் ஜெயராமன் உயிரிழந்தார். இந்தநிலையில் பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்த நெல் ஜெயராமனை நினைவு கூறும் வகையில் அவரை பற்றிய குறிப்புக்கள் பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

நெல் ஜெயராமனின் குறிப்புக்கள் விவசாயிகள் மற்றும் மாணவர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்று தமிழ்நாடு பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது. புகழ்பெற்ற தாவரவியலாளர்களான நார்மன் இ.போர்லாக் மற்றும் எம்எஸ் சுவாமிநாதன் ஆகியோரின் வரிசையில் புத்தகத்தில் நெல் ஜெயராமன் பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது. வாழ்நாளையே விவசாயத்துக்காக அர்ப்பணித்த நெல் ஜெயராமன் 9-ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் நிலையில், 12-ம் வகுப்பு புத்தகத்தில் பாடமாக மாறியுள்ளார்.

Tags : #NELJAYARAMAN #TAMILNADU #GOVERNMENT #TEXBOOK