ப்ளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்த மாவட்டம் முதலிடம்?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | May 08, 2019 10:53 AM

பதினோறாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியோரில் 95 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

plus one exam 2019 results released today check the details

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுதிய பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தமிழகம், புதுச்சேரியில் பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 6-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 8 லட்சத்து 21,000 மாணவ, மாணவிகள் எழுதினர்.

விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்ததை அடுத்து, பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று காலை 9.30 மணியளவில் வெளியானது. மொத்தம் 95% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.  மாணவர்களில் 93.3 சதவிகிதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகளின் தேர்ச்சி  சதவிகிதம் 96.5. இது மாணவர்களை விடவும் 3.2 சதவிகிதம் அதிகம்.

கடந்த ஆண்டில் +1 மாணவிகளின் தேர்ச்சி விழுக்காடு 94.6- ஆக இருந்தது. இந்த ஆண்டில்  96.5 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பில் முதலிடத்தைப் பிடித்த திருப்பூர் மாவட்டம் இம்முறை இரண்டாம் இடத்துக்கு சென்றது. ஈரோடு மாவட்டம் 98% தேர்ச்சியுடம் முதலிடம் பிடித்தது. திருப்பூர் 97.9% தேர்ச்சியுடன் இரண்டாம் இடமும், கோயம்புத்தூர் 97.6% தேர்ச்சியுடன் மூன்றாமிடமும் பிடித்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகளில் 90.6 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகளில் 96.9 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் 99.1 சதவீதம் என்று கூறப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதள முகவரியில் சென்று அறிந்து கொள்ளலாம். மேலும், மாணவர்களின் செல்போன் எண்ணிற்கும் குறுஞ்செய்தியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் வரும் 10, 11 மற்றும் 13-ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #RESULTS #PLUS1 #TAMILNADU