‘700 ஆண்டுகள் பழமையான சிலை.. 100 வருஷத்துக்கு முன் போலீஸில் புகார்’.. வீட்டுச் சுவரை இடித்து மீட்டெடுப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 29, 2019 12:59 PM

மேலூரில் வீட்டு சுவருக்குள் இருந்து பழமை வாய்ந்த திரௌபதி அம்மனின் சிலை 100 வருடங்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ள சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TN - nearly 700 yrs old metal Statue found inside home wall

மேலூரில் புகழ்பெற்ற திரௌபதி அம்மன் கோவில் 500 ஆண்டுகளாக இருந்து வருகிறது. மிகவும் பழமையான இந்தக் கோவிலில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பாக நாராயணன் என்பவர் கோயில் பூசாரியாகவும், கந்தசாமி என்பவர் பூசாரியின் உதவியாளராகவும் இருந்து வந்துள்ளனர்.

அப்போது பூசாரி நாராயணனுக்கும் அவரது உதவியாளர் கந்தசாமிக்கும் இடையேயான கருத்து வேறுபாடு காரணமாக, கோவிலில் இருந்த திரௌபதி அம்மன் சிலை மற்றும் நகைகளை கந்தசாமி எடுத்துச் சென்றுவிட்டதாகவும், இதுகுறித்து அந்த காலக்கட்டத்திலேயே போலீஸில் புகார் அளிக்கப்பட்டதாகவும், அந்த புகாரின் பேரில் போலீஸார் விசாரித்தபோது, 100 ஆண்டுகளுக்கும் மேலாக திருடு போன திரௌபதி அம்மன் சிலை கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது தெரியவந்தது.

ஆனால் கந்தசாமியின் வீடு அடுத்தடுத்து 2 தலைமுறைகளாக கை மாறி தற்போது வேறொருவரின் உரிமைக்குள் இருக்கிறது. இந்த சூழலில்தான், தங்களது பழைய வீட்டின் சுவரில் சிலை இருப்பதாக கந்தசாமியின் பேரன் கோயில் நிர்வாகத்தினரிடம் தெரிவித்தனர்.

இதனை அடுத்து ஐ.ஜி பொன்.மாணிக்க வேலின் ஆணையின் பேரில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார், கந்தசாமியின் பேரன் சொன்ன, அவர்களது பழைய வீட்டிற்கு சென்று சுவரை இடித்த பின்னர், 2 1/2 அடி உயரமுள்ள 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த திரௌபதி அம்மனின் உலோகச் சிலை மீட்கப்பட்டுள்ளது.

Tags : #POLICE #TAMILNADU #METALSTATUE