'தமிழகத்திலேயே முதல் முறையாக'.. திருநங்கை திருமணத்துக்கு கிடைத்த அங்கீகாரம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | May 21, 2019 02:39 PM
தமிழ்நாட்டில் முதல்முறையாக சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட திருநங்கையின் திருமணத்துக்கு தூத்துக்குடி சார்பதிவாளர் அலுவலகம் சான்றிதழ் கொடுத்துள்ளது.
தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துவரும் தூத்துக்குடி சங்கரபேரியைச் சேர்ந்த அருண்குமார் என்பவர், அதே தூத்துக்குடியின் ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவரும், மகளிர் கல்லூரி ஒன்றில் இளங்கலை ஆங்கிலம் 2-ஆம் ஆண்டு படித்து வருபவருமான திருநங்கை ஸ்ரீஜா என்பவரை காதலித்து, கடந்த வருடம் அக்டோபர் மாதம் 31-ஆம் நாள் கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டார்.
ஆனால், அப்போது இவர்களின் திருமணத்துக்கு பதிவுச் சான்றிதழ் வழங்கவியலாது என சார்பதிவாளர் கூறியதாகத் தெரிகிறது. இதனைத்தொடர்ந்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அருண்குமார்-ஸ்ரீஜா தம்பதியர் கோரிய மனுவில் தங்களுக்கு பதிவுச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரியிருந்தனர்.
இதன் பின்னர் இருவருக்குமான திருமண பதிவுச் சான்றுக்கான ரசீது வழங்கப்பட்டு, சப்ரிஜிஸ்டார் அலுவலர்கள் முன்னிலையில், இந்த தம்பதியர் மீண்டும் மோதிரம் மாற்றி, மாலை மாற்றி தங்கள் திருமணத்தை ரிஜிஸ்டர் செய்துள்ளனர். இவர்களுக்கு முதன்முதலில் சார்பதிவாளர் அலுவலகம் அங்கீகரிக்கப்பட்ட திருமணத்துக்கான பதிவுச் சான்றிதழை வழங்கியுள்ளது.