'அவன் என்ன உன் முதல் புருஷனா..? இல்ல நீதான் அவனுக்கு முதல் தாராமா?'.. பச்சிளம் குழந்தைக்கு தாய் செய்த கொடுமை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Sep 26, 2019 12:49 PM
வாணியம்பாடியில் 65 ஆயிரம் ரூபாய்க்கு குழந்தை விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் குழந்தையின் தாய் உட்பட 5 பேரைப் பிடித்துக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், வாணியம்பாடியைச் சேர்ந்த இந்திரா நகரைச் சேர்ந்தவர் சத்யா(புகைப்படத்தில் நடுவில் இருப்பவர்). ஏற்கனவே 2 திருமணம் ஆன இப்பெண் ஓராண்டுக்கு முன்னர்தான் ஏற்கனவே திருமணமான முருகன் என்பவரை திருமணம் செய்து, பின்னர் கர்ப்பம் தரித்தார். குழந்தையும் பிறந்தது. ஆனால் காசநோயால் பாதிக்கப்பட்ட முருகன் சத்யாவின் வீட்டுக்கு வரும்போதெல்லாம், குழந்தையை தூக்காமல் கொஞ்சியுள்ளார்.
இதனால், அந்த குழந்தையை வைத்துக்கொள்ள விரும்பாத சத்யா, தன் பெரியம்மாள் கீதாவிடம் கூறவே, பேசாமல் குழந்தையை விற்றுவிடலாம் என பெரியம்மாள் கீதா(புகைப்படத்தில் இடதுபுறம்) ஐடியா கொடுத்துள்ளார். ஆனால், கணவர் முருகனுக்குத் தெரிந்தால் விடமாட்டார் என சத்யா பயந்துள்ளார். ஆனால் பெரியம்மாள் கீதாவோ, ‘அவன் என்ன உனக்கு முதல் கணவனா? இல்லை நீதான் அவனுக்கு முதல் மனைவியா? இத்தனைக்கும் அவன் இன்னும் முதல் மனைவியுடன் வாழ்ந்துகொண்டுதானே இருக்கிறான்.. இதை என்னிடம் விடு நான் பார்த்துக்கிறேன்’ என்று கூறி இடைத்தரகர் கவிதாவை (புகைப்படத்தில் வலதுபுறம்) அழைத்துள்ளார்.
கவிதா மூலம் பெங்களூரைச் சேர்ந்த ரஹ்மத் மற்றும் ஷகிலா தம்பதியரிடம் 65 ஆயிரம் ரூபாய்க்கு, சத்யாவின் ஆண்குழந்தையை கவிதா விற்றுள்ளார். குழந்தை பெங்களூருக்குச் செல்ல, கமிஷன் பணத்தை கவிதா எடுத்துக்கொள்ள, குழந்தையை விற்ற பணத்தை வைத்து சத்யாவும், அவரது பெரியம்மாள் கீதாவும் ஜாலியாக செலவழித்துள்ளதாகத் தெரிகிறது. பின்னர் வந்த முருகன் குழந்தை எங்கே என்று கேட்க, பெரியம்மாள் கீதா தன் வீட்டுக்கு குழந்தையை தூக்கிச் சென்றுள்ளதாக சத்யா சமாளித்துள்ளார்.
ஆனால் சந்தேகப்பட்ட முருகன், குழந்தையை கண்ணில் காட்டுமாறு வலியுறுத்தும்போதுதான், சத்யா உண்மையைச் சொல்லியுள்ளார். அதன் பின்னர் அதிர்ந்த முருகன், வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்படி, போலீஸார் பெங்களூர் சென்று குழந்தையை மீட்டுக்கொண்டு வந்துள்ளனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட பெங்களூர் தம்பதி, தாய் சத்யா, பெரியம்மாள் கீதா,இடைத்தரகர் கவிதா உள்ளிட்டோரிடம் இன்னும் பலமான விசாரணை நடந்துவருகிறது.