‘இந்தாங்க உங்க குழந்தை’.. ஒரு மணி நேரம் கழித்து ‘நர்ஸ் காட்டியதைப் பார்த்து’.. ‘அதிர்ந்துபோன பெற்றோர்’..
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | Sep 11, 2019 03:29 PM
தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு பதிலாக மற்றொரு குழந்தையை மாற்றிக் கொடுத்ததாக தனியார் மருத்துவமனை மீது பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

ஹரியானா மாநிலம் தீக்லி கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி குழந்தை பிறந்துள்ளது. பிறந்ததும் தாயிடம் குழந்தையைக் காட்டாமல், குழந்தை ஆணா, பெண்ணா என்பது குறித்து கேட்டபோதும் சரியாக பதிலளிக்காமல் இருந்துள்ளனர். குழந்தையை பார்க்க வேண்டும் எனக் கேட்ட தந்தையையும் மருத்துவர்கள் பார்க்க அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு நர்ஸ் ஒருவர் பெண் குழந்தை ஒன்றை கொண்டுவந்து, இதுதான் உங்கள் குழந்தை எனக் கொடுத்துள்ளார். ஆனால் அந்தக் குழந்தை பார்ப்பதற்கு பிறந்து 7 நாட்களான குழந்தை போல இருப்பதைப் பார்த்து குழந்தையின் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து அங்கிருந்த மூத்த மருத்துவரிடம் குழந்தையின் தந்தை புகார் அளித்தும் அவர்கள் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.
இதுபற்றி பேசியுள்ள குழந்தையின் தந்தை, “பிறந்து 7 நாட்களானது போல இருந்த அந்தக் குழந்தை எங்கள் இருவரின் ஜாடைக்கும் தொடர்பில்லாமல் இருந்தது. ஆனால் அந்த மருத்துவமனையில் அதே நாள் பிறந்த ஆண் குழந்தை ஒன்று தனியாக வைக்கப்பட்டிருந்ததை நான் பார்த்தேன். அந்தக் குழந்தையின் தாய் என அங்கு யாரும் இல்லை. மருத்துவர்களிடம் புகார் அளித்தும் கேட்காததால் வேறு வழியின்றி நாங்கள் எங்களுக்கு கொடுக்கப்பட்ட குழந்தையை எடுத்துக்கொண்டோம்” எனக் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக குழந்தையின் பெற்றோர் போலீஸாரிடம் புகார் அளித்ததோடு, முதல்வர் தனிப்பிரிவிற்கும் மனு ஒன்றைக் கொடுத்துள்ளனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையில் பிப்ரவரி 7ஆம் தேதி அந்த மருத்துவமனையில் ஒரேயொரு பிரசவம் மட்டுமே நடந்தது தெரியவந்துள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர்.
