'கண்ணுக்கு முன்னே மரண பயம்'... 'சுக்குநூறாக தெறித்த பைக்'... சென்னை டெலிவரி பாயின் திக் திக் நொடிகள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Mar 02, 2020 04:03 PM

கண்ணுக்கு முன்பு மரண பயம் தெரிந்த நிலையில், டெலிவரி பாய் பெரும் விபத்தில் இருந்து தப்பியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் திக் திக் நிமிடங்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்திக் குறிப்பு.

Chennai : Delivery Boy narrowly escapes in Train Accident

காஞ்சீபுரம் மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முத்து. இவரது மகன் நானி. 22 வயது இளைஞரான இவர் ஆன்-லைன் மூலம் உணவு விற்பனை செய்யும் நிறுவனத்தில் ‘டெலிவரி பாயாக’ வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று வாடிக்கையாளர் ஆர்டர் செய்த உணவை கொடுப்பதற்காக வேகமாகத் தனது பைக்கில் சென்றுள்ளார். நேரம் ஆகிவிட்டது என்ற காரணத்தினால் சற்று வேகமாகச் சென்றுள்ளார்.

இதற்கிடையே கூடுவாஞ்சேரியில் இருந்து வண்டலூர் செல்லும் சாலை அருகில் உள்ள ரயில்வே கேட்டில் உள்ள தண்டவாளத்தை, நானி  கடக்க முயன்றுள்ளார். அப்போது சென்னை எழும்பூரில் இருந்து மதுரை நோக்கி செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. ஆனால் ரயில் வருவதைக்  கவனிக்காமல் அவசர அவசரமாக பைக்கில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றார்.

அந்த நேரம் பார்த்து அவரது பைக் திடீரென தண்டவாளத்தில் நின்று விட்டது. இதனால் பதறி போன அவர், பைக்கை எடுக்க முயன்றுள்ளார். அப்போது தான் ரயில் வேகமாக எதிரில் வருவதை நானி கவனித்துள்ளார். அந்த நொடியில் தான் தப்பித்தால் போதும் என பைக்கை அப்படியே போட்டுவிட்டு தண்டவாளத்திலிருந்து மறுபக்கம் குதித்துள்ளார்.

இதனைக் கண்ட என்ஜின் டிரைவர், உடனடியாக ரயிலை நிறுத்தினார். ஆனாலும் ரயில் வந்த வேகத்தில்பைக் மீது மோதியது. மோதிய வேகத்தில் நானியின் பைக் சுக்குநூறாக உடைந்து சிதறியது. சில பாகங்கள் பல மீட்டர் தூரத்தில் சென்று விழுந்தது. இருப்பினும் நானி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதற்கிடையே சில உடைந்த பாகங்கள் ரயிலில் சிக்கி இருந்தது. ரயில் என்ஜின் டிரைவர் அந்த பாகங்களை அகற்றினார்.

பின்னர் இது குறித்து ரெயில்வே பாதுகாப்புப் படை வீரர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தாம்பரம் ரெயில்வே பாதுகாப்புப்படை போலீசார் நானியை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் 20 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

Tags : #TRAINACCIDENT #ACCIDENT #TRAIN #CHENNAI #DELIVERY BOY