'மன்மதன் லீலையை வென்றார் உண்டோ... 'பழைய படம் போட்டதால் 'கடுப்பான' சிறை மாணவர்கள்... 'இதுக்கு போயாடா இப்படி பண்ணிங்க?...'
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரை மத்திய சிறையில் உள்ள கூர்நோக்கு பள்ளியில் புதிய திரைப்படம் திரையிடப்படவில்லை எனக் கூறி சிறார்கள் பள்ளி வளாகத்தில் உள்ள பொருள்களை அடித்து நொறுக்கியும், தங்களைத் தாங்களே காயப்படுத்தியும் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
18 வயதிற்கு உட்பட்டவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவர்களை திருத்தும் நோக்கில் சிறையில் உள்ள கூர்நோக்கு பள்ளியில் அடைக்கப்படுகிறார்கள்.
அவர்களுக்கு இந்திய தண்டனைச் சட்டத்தின்படி எவ்வித தண்டனையும் வழங்க முடியாது. அவ்வாறு அடைக்கப்படும் மாணவர்களுக்கு வாரத்திற்கு ஒரு முறை திரைப்படம் திரையிடப்படுவது வழக்கம்.
இந்நிலையில் மதுரை மத்திய சிறையில் உள்ள கூர்நோக்குப் பள்ளியில் தொடர்ந்து பழைய திரைப்படங்களே திரையிடப்பட்டு வந்துள்ளன. இதனால் வெறுப்படைந்த மாணவர்கள் ஒரு கட்டத்தில் கூர்நோக்கு பள்ளி வளாகத்தில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்க ஆரம்பித்தனர். இதில் 6 மாணவர்கள் தங்களை தாங்களே காயப்படுத்திக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து அவர்கள் பலத்த பாதுகாப்புடன் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் அவர்கள் கூர்நோக்கு பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிகழ்வு தொடர்பாக மதுரை மத்திய சிறையின் கண்காணிப்பாளர் ஊர்மிளா விசாரணை நடத்தி வருகிறார்.