‘விபத்தென நினைத்த வழக்கில் திடீர் திருப்பம்’.. ‘6 மாத பிளான் என’.. ‘மனைவியும், ஆண் நண்பரும் வாக்குமூலம்’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Saranya | Sep 26, 2019 05:03 PM
கரூரில் பெண் ஒருவர் ஆண் நண்பர் உதவியுடன் கணவரை டிராக்டர் ஏற்றிக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகிலுள்ள முடிகனம் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன். விவசாயம் செய்துவந்த இவருக்கு சித்ரா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் சித்ராவிற்கு அதே பகுதியைச் சேர்ந்த சுதாகர் என்ற கல்லூரி மாணவரோடு தவறான பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த மனோகரன் அவர்கள் இருவரையும் அழைத்துக் கண்டித்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த சித்ரா தங்களுடைய உறவுக்கு இடையூறாக இருக்கும் கணவரை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். அதன்படி கடந்த 24ஆம் தேதி கணவரை சந்தைக்கு அனுப்பிவிட்டு அந்த தகவலை சுதாகரிடம் கூறியுள்ளார். பின்னர் சுதாகர் தனது வீட்டிலிருந்த டிராக்டரை எடுத்துச் சென்று சந்தையிலிருந்து இரு சக்கர வாகனத்தில் திரும்பி வந்துகொண்டிருந்த மனோகரன் மீது மோதியுள்ளார். அலறியபடி கீழே விழுந்த மனோகரன் மீது டிராக்டரை ஏற்றிவிட்டு அவர் வீடு திரும்பியுள்ளார்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மனோகரன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விபத்து நடந்தபோது அருகிலிருந்தவர்கள் டிராக்டரில் வந்தது சுதாகரன் தான் எனக் கூற அவரைக் கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சித்ராவையும் போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரித்ததில் 6 மாதங்களாக கணவரைக் கொல்லத் திட்டம் தீட்டி வந்ததும், விபத்துபோல காட்டி தப்பித்து விடலாம் என நினைத்து டிராக்டர் ஏற்றிக் கொன்றது தெரிய வந்துள்ளது.