‘ஓடஓட விரட்டிய மர்ம நபர்கள்’... ‘பதறிப்போன கல்லூரி மாணவர்’... ‘பதைபதைக்க வைக்கும் சம்பவம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Sep 23, 2019 05:58 PM

பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஓட ஓட மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

politehnic student murdered by unknown people in tuticorin

ஸ்ரீவைகுண்டம் அருகே செய்துங்கநல்லூர் சந்தையடியூர் தெருவைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரின் மகன் அபிமணி (23). இவர் செய்துங்கநல்லூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் எந்திரவியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், இன்று வழக்கம் போல் மதிய உணவிற்காக அருகில் உள்ள தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது செய்துங்கநல்லூர் ரயில்நிலையம் அருகே வந்த சமயத்தில், இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து வந்த மர்ம கும்பல் அவரை வழிமறித்தது.

பின்னர் மறைத்து வைத்திருந்த அரிவாள் மற்றும் கத்திகளை அந்தக் கும்பல் எடுக்கவே, பதறிப் போன அபிமணி, இருசக்கர வாகனத்தை கீழே போட்டு விட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். விடாமல் துரத்திய கும்பல், அபிமணியைச் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது. இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த அபிமணி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து அந்த மர்மகும்பல் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கொலை குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து பேசிய தூத்துக்குடி எஸ்.பி., கல்லூரி அருகே மாணவர் அபிமணி கொலை செய்யப்பட்டது சாதிரீதியானது அல்ல என்று தெரிவித்துள்ளார். மேலும், முன்விரோதம் காரணமாக கொலை நடந்துள்ளது. விரைவில் கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

Tags : #TAMILNADU #YOUTH #MURDER