‘பசிக்குதுனு சொன்னான்’... ‘டிபன் வாங்கி வரதுக்குள்’... ‘அரசு மருத்துவமனையில் இளைஞர் செய்த காரியம்’... 'கதறித் துடிக்கும் பெற்றோர்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Dec 04, 2019 09:41 AM

காய்ச்சல் மற்றும் மஞ்சள் காமாலை நோய்க்கான சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர், அரசு மருத்துவமனையின் மாடியிலிருந்து குதித்து, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

young patient committed suicide by jumping from the hospital

திருச்சி கல்லுக்குழி அருகே முடுக்குப்பட்டியை சேர்ந்தவர்கள் நாகராஜன்- மீராபாய் தம்பதியினர். இவர்களது இளைய மகன் கணேசமூர்த்தி, கோவையில் உள்ள பஞ்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், தீபாவளி முதலே கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த கணேசமூர்த்தி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு காய்ச்சல் குணமாகவில்லை. இதனால் கடந்த 22-ம் தேதி, திருச்சி அரசு மருத்துவமனையின், 6-வது தளத்தில் சேர்க்கப்பட்டு, உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமையன்று காலை, யாரும் எதிர்பாராத வகையில், மருத்துவமனையின் 6-வது தளத்தின் மொட்டை மாடிக்கு சென்ற அவர், அங்கிருந்து கீழே குதித்தார். இதில் படுகாயமடைந்த அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி உயிரிழந்தார். இதனை அறிந்த கணேசமூர்த்தியின் தாய், கதறித் துடித்தார். ‘உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டு நல்லாதான் இருந்தான். அவன் கூடவே இருந்து கவனித்து வந்தோம். காலையில் பசிக்குதுன்னு சொன்னான்.

அவனின் அப்பா வெளியே போய் சாப்பிட டிபன் வாங்கி வரப் போனார். அவர் வருவதற்குள் இப்படி பண்ணிட்டானே. கல்யாணத்துக்குப் பெண் பார்த்து வந்த நிலையில், என் பிள்ளை இப்படிப் பண்ணிட்டானே. என்ன செய்வேன்’ என அழுது புலம்பினார். இன்னும் சில நாட்களில் வீட்டுக்குச் செல்லும் வகையில், உடல்நிலை முன்னேறியிருந்த நிலையில், ‘சரியான வேலை இல்லாதது, திருமணம் ஆகாதது, அத்துடன் உடல்நிலை சரியில்லாதது ஆகியவற்றால் ஏற்பட்ட மன உளைச்சலால் இந்த முடிவை அவர் எடுத்திருக்கலாம்’ என்று மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

Tags : #SUICIDE #TRICHY