‘10-ம் வகுப்பு மாணவன் மரணம்’... ‘விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்’... 'மகனை நினைத்து புலம்பும் தந்தை’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Dec 06, 2019 09:54 AM
10-ம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே, தொட்டப்ப நாயக்கனூரைச் சேர்ந்த சிங்கம் - அமுதா தம்பதியினரின் மகனான பாலாஜி (15), உசிலம்பட்டியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில், 10-ம் வகுப்பு படித்து வந்தார். அந்தப் பள்ளியின் கணித ஆசிரியர் ரவி, தனியாக நடத்தி வரும் டியூசனுக்கு வராததால், கடந்த 6 மாத காலமாக தன்னை திட்டி வந்ததால்தை, கடிதம் எழுதி வைத்துவிட்டு, பெற்றோர் தோட்டத்திற்கு போனபோது, கடந்த ஞாயிற்றுகிழமை பாலாஜி தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில், தனது வீட்டிலிருந்து அதிக தொலைவில் இருந்ததால், மாணவர் பாலாஜி மட்டும், கணித ஆசிரியர் ரவியின் டியூசனுக்கு செல்லவில்லை என்று தெரிய வந்துள்ளது. இதனால் ஆசிரியர் ரவி தொடர்ந்து பாலாஜியைத் தகாத வார்த்தையால் திட்டி வந்துள்ளார். பாலாஜி தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தாலும், அவ்வளவு மார்க் எடுக்கும் அளவுக்கு உனக்கு தகுதி இல்லை என்று கூறி, பாலாஜியின் விடைத்தாளில் மார்க்கை, ஆசிரியர் ரவி குறைத்து போட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது.
மேலும் தந்தையிடம் மாணவர் பாலாஜி தெரிவித்தபோது, அவர் ஆசிரியர் ரவியிடம் பேசியுள்ளார். அப்போது, உங்களது மகன் மட்டும் தான் தேர்வில் பார்த்து எழுதுகிறான் என்று ஆசிரியர் ரவி தெரிவித்ததால், மகனை திட்டியதுடன், பாலாஜியின் பேச்சை அவர் மதிக்கவில்லை. இதனால் ஆசிரியர் ரவி, பாலாஜியிடம், ‘நீ பார்த்துதான் தேர்வு எழுதுறன்னு உன் வீட்டுக்கு ஃபோன் பண்ணி சொல்வதுடன், உன் பப்ளிக் எக்ஸாம் பேப்பர் எந்த ஊருக்குப் போனாலும், நீ ஃபெயில் ஆகுற மாதிரி செஞ்சிடுவேன்’ என மிரட்டியும் உள்ளார்.
இதனால் பயந்துபோன பாலாஜி, ஆசிரியர் காலில் விழுந்ததுடன், அதன்பிறகு தந்தையிடம், ஆசிரியர் ரவி பற்றி பேசுவதை நிறுத்தியுள்ளான். தற்போது இது தெரிய வந்ததால், மாணவர் பாலாஜியின் தந்தை, மகனை முன்பே புரிந்து வைத்திருந்தால், அவனை படிக்க வேண்டாம் என்று கூறியிருப்பேன் என்று அழுது புலம்புகிறார். கடந்த 15 நாட்களுக்கு முன்னரே கடிதம் எழுதிவைத்த பாலாஜி, எப்போதும் வகுப்பில் தற்கொலை செய்து கொள்வது எப்படி என்று சக மாணவர்களிடம் கேட்டு வந்ததுடன், 2 முறை அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.
யாரையும் தரக்குறைவாக பேசாத பாலாஜி, தற்போது ஆசிரியரை ஒருமையில் திட்டி எழுதிய கடிதமே, அவன் எவ்வளவு மன உளைச்சலில் இருந்துள்ளான் என்பது தெரிய வந்துள்ளதாக கூறுகின்றனர் அக்கம்பக்கத்தினர். நன்றாக படிக்க கூடிய மாணவர் பாலாஜியின் இறப்புக்கு காரணமான, ஆசிரியர் ரவியை போலீசார் தேடி வருகின்றனர்.