'மச்சான் எல்லாரும் வீட்டுக்குள்ள தான் இருப்பாங்க'...'இளைஞர்கள் போட்ட பிளான்'... சென்னையில் பரபரப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஊரடங்கு உத்தரவு தானே நாம்ம சிக்கமாட்டோம் என, பிளான் போட்டு இளைஞர்கள் சிலர் இளம்பெண்ணிடம் சங்கிலி பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாங்காடு அடுத்த சிக்கராயபுரம், சிவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சலி. ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி விட்டு வீட்டின் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 வாலிபர்கள், அஞ்சலியின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்தனர். இதை சற்றும் எதிர்பாராத அவர், உடனே சுதாரித்துக் கொண்டு சங்கிலியை பறித்த வாலிபரின் சட்டையை பிடித்து இழுத்து கீழே தள்ளினார்.
அந்த வாலிபர் கீழே விழுந்ததும் திருடன் திருடன் என கூச்சலிட்டார். அஞ்சலியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அந்த பகுதி பொதுமக்கள், வாலிபர்கள் இருவரையும் மடக்கிப்பிடித்து அடித்து உதைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் இரண்டு வாலிபர்களையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டார்கள். அதில் இருவரும் திருவேற்காட்டை சேர்ந்த சதீஷ், அவருடைய நண்பர் அஜித் என்பது தெரியவந்தது.
இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ''தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் இருக்காது. இதனால் தனியாக பெண்கள் யாராவது நடந்து சென்றால் அவர்களின் செயினை பறிக்க முடிவு செய்தோம். உதவிக்கும் யாரையும் வரமாட்டார்கள் என முடிவு செய்ததாக'' விசாரணையில் கூறியுள்ளார்கள்.
