'திருடுறதுல சோம்பேறித்தனம்' ... எதுவும் எடுக்காம போயி கடைசியில் .... வசமாக சிக்கிக் கொண்ட திருடர்கள்
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை ECR சாலை நீலாங்கரையில் கடந்த மாதம் மருத்துவர் ஒருவரின் வீட்டில் சில சவரன் தங்க நகைகள் மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் ஆகியவை கொள்ளை போனது. இது குறித்து நீலாங்கரை காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமராவை சோதனை செய்த போது அதில் கொள்ளையர்கள் கொள்ளையடித்து விட்டு வெளியில் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது.

சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர். நீலாங்கரை மருத்துவர் வீட்டில் கொள்ளை நடந்த அடுத்த 20 நாட்களில் பனையூர் அருகே இன்னொரு வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து அந்த வீட்டின் உரிமையாளர் அளித்திருந்த புகாரில், '14-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை வெளியில் சென்றிருந்தேன். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வேலை செய்யும் பெண் ஒருவர் காலை முதல் மாலை வேலை வீட்டினை சுத்தம் செய்து விட்டு கிளம்பி விடுவார். 18 ஆம் தேதியன்று காலை வீட்டிற்கு வந்த வேலைக்கார பெண் கதவு உடைக்கப்பட்டிருப்பதை அறிந்து எனக்கு தகவல் கொடுத்தார். அன்றிரவு வீட்டிற்கு வந்து பார்த்த போது ஐபோன்கள், தங்க செயின்கள், வைர நகைகள் ஆகியவை கொள்ளை போனது தெரிய வந்தது' என குறிப்பிட்டிருந்தார்.
இந்த இரண்டு கொள்ளைகளிலும் ஈடுபட்டவர்கள் ஒரே கும்பல் என்பதை சிசிடிவி மூலம் உறுதிப்படுத்தினர். சிசிடிவியில் நள்ளிரவு இரண்டு பேர் ஆட்டோ ஏறி செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. அந்த ஆட்டோவின் பதிவு நம்பரை கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தென்காசி மாவட்டத்தை சேர்ந்த உலகநாதன் மற்றும் நல்லசிவம் என தெரிய வந்தது.
உலகநாதன் மற்றும் நல்லசிவம் ஆகியோர் திருடுவதற்கு பைகள் எதுவும் எடுத்து செல்லாமல் கொள்ளையடித்த வீட்டிலிருந்தே ட்ராலி சூட்கேஸ் மூலம் திருடிய பொருட்களை கொண்டு சென்றுள்ளனர். திருடர்களின் இந்த சோம்பேறித்தனத்தால் தான் அவர்கள் மாட்டிக்கொண்டதாக போலீசார் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
