‘குழந்தைக்கு தடுப்பூசி போட போன நர்ஸ்’.. தாய் சொன்ன பகீர் தகவல்.. மதுரையை அதிரவைத்த மற்றொரு சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரையில் மர்மமான முறையில் இறந்து புதைக்கப்பட்ட பெண் குழந்தையை தோண்டி எடுத்து காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சேடபட்டியை சேர்ந்தவர்கள் சூர்யபிரபா-முத்துப்பாண்டி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 6ம் தேதி இவர்களுக்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அடுத்து குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்காக கிராம செவிலியர் மீனாட்சி சென்றுள்ளார்.
அப்போது குழந்தை கடந்த பிப்ரவரி 15ம் தேதி உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதாக குழந்தையின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த செவிலியர், உடனே இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி பிரபாகரதாஸ்க்கு தகவல் கொடுத்துள்ளார். இதனை அடுத்து அவர் காவல் நிலையத்தில் இதுதொடர்பாக புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் மருத்துவ குழுவுடன் கிராமத்துக்கு வந்த போலீசார், புதைக்கப்பட்ட குழந்தையை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் பெண்சிசுக்கொலை என தெரியவந்ததாக கூறப்படுக்கிறது. சில தினங்களுக்கு முன்பு உசிலம்பட்டி அருகே கள்ளிப்பால் கொடுத்து ஒரு பெண்சிசு கொலை செய்யப்பட்ட நிலையில் மற்றொரு பெண் குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
