டெங்கு காய்ச்சலில் பலியான 'காதலி'... வேதனையில் 'கல்லூரி மாணவர்' எடுத்த கோர முடிவு... 'கோவையில்' நிகழ்ந்த 'அதிர்ச்சி சம்பவம்'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Jan 31, 2020 11:42 AM

கோவையில் டெங்கு காய்ச்சலில் காதலி இறந்ததால் வேதனை அடைந்த கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

College student commits suicide by death of girlfriend

கோவை செல்வபுரம், சேத்துமாவாய்க்கால் பகுதியை சேர்ந்த சொக்கலிங்கம் என்பவரின் மகன் வசந்த் கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். 2-வது ஆண்டு படித்து வந்தார்.

இவர் தன்னுடன் பள்ளியில் படித்த மாணவியை காதலித்து வந்தார். அவர்கள் இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் வசந்தின் காதலி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குணமாகவில்லை. இதனால் வசந்த்தின் காதலி சிகிச்சை பலனின்றி கடந்த 2 மாதத்துக்கு முன்பு பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் மனவேதனை அடைந்த வசந்த் யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார்.  சில நாட்கள் கழித்து தனது நண்பர்களின் வாட்ஸ்அப் எண்ணுக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில் தனது காதலி இறந்து விட்டதால், இந்த உலகில் வாழ எனக்கு விருப்பம் இல்லை. காதலி சென்ற இடத்துக்கே நான் செல்கிறேன் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் உடனே வசந்தின் தந்தையின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு தெரிவித்தனர்.

அவர் தனது மகனை வீட்டில் தேடினார். ஆனால் அவர் வீட்டில் இல்லை. உடனே நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து அக்கம் பக்கத்தில் தேடினார். அப்போது சேத்துமாவாய்க்கால் அருகே ஒரு மரத்தில் வசந்த் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் செல்வபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வசந்த் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குறிப்பு : தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

Tags : #COIMBATORE #COLLEGE STUDENT #SUCIDE #GIRLDFRIEND DEATH