ஒரு தவறுக்கு எத்தனை 'தண்டனை' தருவீர்கள்... பள்ளி நிர்வாகத்தின் கெடுபிடியால் 'பறிபோன உயிர்'... குமுறும் 'பெற்றோர்'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Suriyaraj | Jan 12, 2020 11:35 AM
திருச்சியை அடுத்த முசிறியில் பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட 11 ஆம் வகுப்பு மாணவர், விரக்தியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் முசிறியில் செயல்பட்டு வரும் தனியார் CBSE பள்ளிக்கூடம் ஒன்றில் பிரவீன் என்ற மாணவர் பதினோராம் வகுப்பு படித்து வந்தார். பிரவீனின் தந்தை துரைராஜ் மலேசியாவில் பணிபுரிந்து வரும் நிலையில் அவர் தாய் வாசுகி கவனிப்பில் இருந்து வந்தார்.
இந்த நிலையில், பிரவீன் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் ஆசிரியர்கள், மாணவிகள் முன்பு நிறுத்தி வைத்து பிரவீனை அவமானப்படுத்தும் விதமாக நடத்தியதாகவும், இதைப் பார்த்து மாணவி ஒருவர் பிரவீனை கேலி செய்ததாகவும் கூறப்படுகின்றது.
இதனால் ஆத்திரம் அடைந்த பிரவீன், அந்த மாணவியை கன்னத்தில் அறைந்ததால் அதற்கு தண்டனையாக அவரை 10 நாட்கள் சஸ்பெண்டு செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 10 நாட்கள் கழித்து பள்ளிக்குச் சென்ற பிரவீனை பள்ளி நிர்வாகம் நாள் முழுவதும் காத்திருக்க வைத்து வீட்டுக்கு திருப்பி அனுப்பி உள்ளது. இரு தினங்கள் கழித்து பிரவீன் தனது தாயை அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போதும் அவரை காத்திருக்க வைத்துள்ளனர். அவரை பார்த்து பலரும் சிரித்தபடியே சென்றதால் பிரவீன் விரக்தியடைந்துள்ளார். பின்னர் பள்ளி நிர்வாகம் அவரை பள்ளியைவிட்டு நீக்கியதாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மன உளைச்சலுடன் வீட்டிற்கு வந்த பிரவீன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகவும், தனது மகனின் இந்த விபரீத முடிவுக்கு பள்ளி நிர்வாகத்தின் கெடுபிடியான நடவடிக்கையே காரணம் எனவும் அவரது தாய் குற்றம்சாட்டியுள்ளார்
மாணவனின் ஒரு தவறுக்கு எத்தனை தண்டனை தருவீர்கள் என்று கேள்வி எழுப்பி உள்ள உறவினர்கள், விரக்தி மனநிலையில் சாப்பிடாமல், தூங்காமல் தவித்த தங்கள் பிள்ளையை கவனமாக பார்த்துக் கொண்ட நிலையிலும் இந்த சோக சம்பவம் நிகழ்ந்து விட்டதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
குறிப்பு : தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.