'நல்ல வேளை எலக்‌ஷன் அறிவிச்சதும் 21 வயது ஆயிடுச்சு!'.. 'வைரலாகும்' கோவை 'மீம் கிரியேட்டர்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Dec 23, 2019 01:03 PM

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர்களின் பரப்புரைகளும் தீவிரமடைந்துள்ளன.

Kovai meme creator becomes local body election candidate

வழக்கமான கட்சிகளை விடவும், இம்முறை சுயேட்சையாக நிற்கவிருக்கும் வேட்பாளர்கள் மக்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த வரிசையில், இளம் வேட்பாளர்களும் இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் கோவை மாவட்டம் நீலாம்பூர் ஊராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு 21 வயதான நாகர்ஜூன் என்கிற கல்லூரி மாணவர் போட்டியிடுகிறார்.

நாகர்ஜூன், கல்லூரி மாணவர் மட்டுமல்லாமல், ஒரு மீம் க்ரியேட்டர் என்பதால், அனைவரின் கவனத்தையும் தனது மீம்ஸ்களால் கவர்ந்து வருகிறார். கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் முதுநிலை இதழியல் பயின்றுகொண்டிருக்கும் இவர் கடந்த ஒரு வருடமாக உள்ளாட்சித் தேர்தல் பற்றி ஆய்வுகளை செய்து வந்ததாகவும், தேர்தல் அறிவிக்கப்பட்ட நேரத்தில் தனக்கு 21 வயது ஆகிவிட்டதால், தன்னால் நிற்க முடிந்ததாகவும், 2016ல் தேர்தல் வந்திருந்தால் தன்னால் நின்றிருக்க முடியாது என்றும் கூறியுள்ளார். மேலும் எப்படியாவது இந்த தேர்தலில் நின்று மாற்றம் கொண்டுவர முயற்சிக்க வேண்டும் என்று நினைத்ததாகவும் நாகர்ஜூன் குறிப்பிட்டுள்ளார்.

நீலாம்பூர் ஊராட்சியில் மூன்றாவது வார்டு உறுப்பினருக்காக சீப்பு சின்னத்தில் போட்டியிடும், நாகர்ஜூன் பரப்புரைக்குச் செல்லும்போது,  ‘நீயாப்பா வேட்பாளர்?.. சின்ன பையனாட்டம் இருக்கியே?’ என்று கேட்கும் மக்களுக்கு விளக்கிச் சொல்லி புரியவைத்தும், துண்டு பிரசுரங்களைக் கொடுத்து தெளியவைத்தும் வாக்கு சேகரிக்கும் நாகர்ஜூன் களத்தில் பாசிட்டிவான சூழல் நிலவுவதாகவே கூறியுள்ளார். இவர் தனது துண்டு பிரசுரத்தில், உலகப் பொதுமறை மீது ஆணையாக, மக்கள் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் என உறுதியளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

Tags : #MEMECREATOR #COIMBATORE #CANDIDATE #LOCALBODYELECTIONS