‘போலீஸ் பூத் மீது பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்’.. ‘விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்’.. தேனாம்பேட்டையில் பரபரப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Feb 21, 2020 10:22 AM

தேனாம்பேட்டை போலீஸ் பூத் மீது இளைஞர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chennai youth throwing petrol bomb near Teynampet police booth

சென்னை தேனாம்பேட்டை பருவா நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் (26). இவர் ஆன்லைன் உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். வெங்கடேசன், அப்பகுதியில் உள்ள மகளிர் கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவரை கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். தினமும் குடித்துவிட்டு காதலிக்கு போன் செய்து தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன் தனது காதலியை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கல்லூரி மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து வெங்கடேசனை அழைத்து போலீசார் கண்டித்து அனுப்பியுள்ளனர். இதற்கிடையில் காதலர் தினத்தன்று தனது காதலி வேறொரு இளைஞருடன் பேசிக்கொண்டு இருந்ததை வெங்கடேசன் பார்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன் தனது காதலியை கண்டித்துள்ளார். அப்போது கல்லூரி மாணவி இனி நான் உன்னை காதலிக்க மாட்டேன். தற்போது வேறொருவரை காதலிப்பதாக கூறியுள்ளார்.

இதனை அடுத்து கல்லூரி மாணவி தனது செல்போனில் வெங்கடேசனின் நம்பரை ப்ளாக் செய்துள்ளார். இதனால் பலமுறை போனில் தொடர்பு கொண்டும் காதலியிடம் பேச முடியாமல் வெங்கடேசன் தவித்துள்ளார். பின்னர் நண்பரின் செல்போனை வாங்கி காதலியிடம் பேசியுள்ளார். அப்போது, இருவரும் காவல் நிலையத்தில் எழுதிக் கொடுத்துவிட்டு பிரிந்து விடலாம் என்றும், அதற்குமுன் கடைசியாக ஒருமுறை பேச வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு கல்லூரி மாணவி சம்மதம் தெரிவிக்கவே, திருவள்ளுவர் சாலையில் உள்ள போலீஸ் பூத் அருகே மாலை 4 மணிக்கு சந்திக்கலாம் என வெங்கடேசன் கூறியுள்ளார்.

இதனிடையே கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த கல்லூரி மாணவி வேறொரு இளைஞரை காதலிப்பதால், தனது காதலியை கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். இதற்காக கத்தி மற்றும் பெட்ரோல் குண்டுடன் பைக்கில் சம்பவ இடத்துக்கு வந்துள்ளார். அங்கு வந்து நீண்ட நேரமாக காதலிக்கு போன் செய்துள்ளார். ஆனால் கல்லூரி மாணவி போனை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன் பெட்ரோல் குண்டை அருகில் உள்ள போலீஸ் பூத் மீது வீசிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறி ஓடியுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்துள்ளனர். பின்னர் அதே பகுதியில் பதுங்கி இருந்த வெங்கடேசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலி வராத ஆத்திரத்தில் போலீஸ் பூத் அருகே இளைஞர் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CRIME #POLICE #CHENNAI #TEYNAMPET #GIRLFRIEND #YOUTH #PETROLBOMB