'பெண்' போலீசாக இருந்து... அறுவை சிகிச்சை செய்து 'ஆணாக' மாறி... 'திருமணம்' செய்துகொண்ட போலீஸ்காரர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாமஹாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டம் மஜல்கான் பகுதியை சேர்ந்த காவல் நிலையத்தில் பெண் போலீசாக பணிபுரிந்து வந்தவர் லலிதா குமாரி சால்வே(30). கடந்த 2016-ம் ஆண்டு முதல் தன்னுடைய உடலில் ஆண் தன்மை அதிகமாக இருப்பதை அறிந்து அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாற விரும்பினார். லலிதாவுக்கு அறுவை சிகிச்சை செய்ய விடுப்பு வழங்க மாநில உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது.
இதனை தொடர்ந்து லலிதா மும்பையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அங்கு அவருக்கு ஆணாக மாறுவதற்காக 3 கட்டமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து அவர் ஆணாக மாறினார். அதன்பின்னர் அவர் தனது பெயரை லலித் என பெயர் மாற்றிக் கொண்டார். மஹாராஷ்டிர போலீசிலும் அவருக்கு ஆண் போலீசாக பதவி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது அவர் திருமணம் செய்து மண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்துள்ளார். இதுகுறித்து அவர், '' தற்போது எனக்கு மறுபிறவி கிடைத்துள்ளது. திருமணத்திற்கு பிறகு மகிழ்ச்சியுடன் வாழுகிறேன். எனக்கு ஒரு புதிய வாழ்க்கை கிடைத்துள்ளது. இதன் மூலம் என்னுடைய குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்,'' என்றார்.