‘மாடி அறைக்கு சென்ற மகன்’... ‘பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி’... ‘தாத்தா இறந்த சில தினங்களில் பேரன் எடுத்த துயர முடிவு’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | May 14, 2020 02:54 PM

நீண்ட நாள் ஆசையை, பெற்றோர் நிறைவேற்றாததால், மன உளைச்சலுக்கு ஆளான 17 வயது சிறுவன், தாத்தா இறந்த சில தினங்களில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Chennai student who committed suicide, because of not getting new bike

சென்னை ராமாபுரம் தாங்கல் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கரன். இவர், சென்னை மாகராட்சி அண்ணாநகர் மண்டலம் 8-ல் வேலைப் பார்த்து வருகிறார். இவரது மகன் யஷ்வந்த் (17).  இவர், கிண்டியில் உள்ள ஐடிஐ-யில் படித்துவந்தநிலையில், கடந்த சில மாதங்களாகவே, விலை உயர்ந்த குறிப்பிட்ட மாடல் டூவீலரை வாங்கித்தாருங்கள் என வீட்டில் யஷ்வந்த் அடிக்கடி கேட்டு சண்டை போட்டுவந்துள்ளார்.

இந்நிலையில், ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருந்த அவர், பைக் வாங்கித் தருமாறு கடந்த 12-ம் தேதியும் மீண்டும் பெற்றோரிடம் சண்டை போட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது அவரது பெற்றோர், உனக்கு 18 வயதான பிறகு பைக் வாங்கித் தருவதாக யஷ்வந்திடம் கூறியுள்ளர். மேலும் அவரது தாத்தா மணி இறந்து சில தினங்களே ஆனதாலும், பைக் வாங்கித் தரவில்லை.

இதனால் தன்னுடைய நீண்ட நாள் பைக்கின் ஆசை நிறைவேறவில்லையே என்ற மனவேதனையில் இருந்த யஷ்வந்த், கடந்த 12-ம் தேதி மாடியில் உள்ள அறைக்குச் சென்று புடவையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்துள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் கீழே இறங்கி வராததால் மாடிக்குச் சென்று பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கியதைப்பார்த்து யஷ்வந்த்தின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக கதவை உடைத்து உள்ளே சென்று அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு யஷ்வந்த்தின் உடல், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு, யஷ்வந்த்தின் இறுதிச் சடங்கு நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விலை உயர்ந்த பைக் கிடைக்காத விரக்தியில் மாணவன், உயிரிழந்த சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.