'சொந்த வீடு வாங்கிட்டானே, பொண்ணு பாக்க ஆரம்பிச்சோம்'... 'WORK FROM HOME செஞ்ச ஐடி ஊழியர்'... ஒரே நிமிடத்தில் நடந்து முடிந்த பயங்கரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Apr 17, 2020 12:33 PM

எனக்கு இந்த வேலை பிடிக்கவில்லை எனக் கூறிக்கொண்டிருந்த ஐடி ஊழியர்,  திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Corona Lockdown : Work From Home IT Employee committed suicide

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சண்முக சிகாமணி நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் கோவில்பட்டி மார்க்கெட்டில் கடை வைத்துள்ளார். விஜயகுமாருக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள். அவர்களில் மூத்த மகனான விக்னேஷ் பொறியியல் பட்டதாரி. 29 வயதான இவர் சென்னையில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பொறியாளராக வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாகச் சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு வந்த அவர், வீட்டிலிருந்தே வேலை செய்து வந்துள்ளார். எப்போதும் கலகலப்பாக இருக்கும் விக்னேஷ், கடந்த சில நாட்களாகத் தான் பார்க்கும் வேலை பிடிக்கவில்லை என வீட்டில் கூறி வந்துள்ளார். விரக்தியான மனநிலையில் காணப்பட்ட அவர் புதன்கிழமை காலையில் பெற்றோருடன் அமர்ந்து உணவருந்தியுள்ளார். பின்னர் தனது அறைக்குச் சென்று வேலை செய்யப்போவதாகக் கூறிவிட்டுச் சென்ற அவர், மதிய உணவைச் சாப்பிடுவதற்காக வெளியே வரவில்லை.

இதனால் மகனை கூப்பிடுவதற்காக விக்னேஷின் தந்தை அவரது அறைக்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சியில் உறையச் செய்துள்ளது. ஆசையாக வளர்த்த மகன் தூக்கில் சடலமாகத் தொங்குவதைப் பார்த்துக் கதறித் துடித்துள்ளார். இதையடுத்து கோவில்பட்டி மேற்கு காவல்நிலைய போலீசார் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அமைதியான சுபாவம் கொண்ட விக்னேஷ், பணியில் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பார் என்று கூறப்படுகிறது. தற்பொழுது குடியிருக்கும் வீட்டினைக் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் தனது சேமிப்பு பணம் மற்றும் தந்தையின் உதவியுடன் விக்னேஷ் வாங்கியுள்ளார்.

மகன் சொந்த வீடு வாங்கிவிட்டானே என்று விக்னேஷ்க்கு அவரது பெற்றோர் வரன் பார்க்கத் தொடங்கியுள்ளார்கள். இந்நிலையில் விக்னேஷ் ஏதேனும் மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது பணிச்சுமை காரணமாகத் தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள், மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 போன்றவற்றை தொடர்பு கொண்டால் இலவசமாக ஆலோசனைகள் பெறலாம்.