'நான் கொரோனா டூட்டில இருக்கேன், எப்படி வர்ரது'... 'வீட்டில் இருந்த கேக் பார்சல்'... சென்னையில் நடந்த துயர சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிறந்த நாள் கேக் வெட்டத் தனது வீட்டுக்குக் காதலன் வராததால், 21 வயதே ஆன பெண் காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், சென்னையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரண்யா. இவர் சென்னை அயனாவரம் பனந்தோப்பு காலனியில் உள்ள காவலர் குடியிருப்பில் தங்கி, ஓட்டேரி காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்துள்ளார். தற்போது கொரோனா பணியில் அனைத்து காவலர்களும் ஈடுபட்டுள்ளதால், அந்த பணியில் மும்முரமாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அவருக்குப் பணி முடிந்த நிலையில், தனது குடியிருப்பிற்குச் சென்று ஓய்வு எடுத்துள்ளார்.
இந்நிலையில் சரண்யா வசிக்கும் குடியிருப்பிற்கு அருகில் வசிக்கும் அவரது தோழியான, மற்றொரு பெண் காவலர் சரண்யாவைப் பார்ப்பதற்காக அவரது அறைக்குச் சென்றுள்ளார். அப்போது சரண்யா தூக்கில் சடலமாகத் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனார்.
இதையடுத்து ஓட்டேரி காவல்நிலையத்திற்கு அவர் தகவல் கொடுத்த நிலையில், அங்கு வந்த காவல்துறையினர், தூக்கில் தொங்கிய சரண்யா உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் எதற்காகத் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டார்கள்.
அதில், ''சரண்யா, 2017-ம் ஆண்டு போலீஸ் பயிற்சி பெற்ற போது அவருடன் பயிற்சியிலிருந்த, 23 வயது போலீஸ்காரர் ஒருவரைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அவரும் தற்போது சென்னையில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். அவருக்கும் கொரோனா தடுப்பு பணி வழங்கப்பட்டுள்ளதால், அந்த பணியில் தீவிரமாக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த காவலருக்குப் பிறந்தநாள் என்பதால், அவருடைய பிறந்த நாளை கொண்டாடுவதற்காக, காதலனைப் பிறந்தநாள் கேக் வெட்டத் தனது வீட்டுக்கு வரும்படி சரண்யா அழைத்துள்ளார். இதற்காக வீட்டில் கேக், சாக்லேட் மற்றும் பரிசுப் பொருட்கள் வாங்கி வைத்து காதலனுக்காகக் காத்திருந்தார். ஆனால் கொரோனா பணியில் இருப்பதால் தற்போது வர முடியாது என அவர் கூறி விட்டதாகத் தெரிகிறது.
இதனால் மிகுந்த விரக்தி அடைந்த சரண்யா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 21 வயதே ஆன இளம் பெண் காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.