'தனியா இருந்தா என் மனசுல இதெல்லாம் தோணுது'...'பதறிய கோவை இளைஞர்'...அடுத்து நடந்த திருப்பம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Mar 28, 2020 02:12 PM

144 தடை உத்தரவு இருப்பதால், தனிமையில் இருக்கும் எனக்குத் தற்கொலை உணர்வு தோன்றுவதாக இளைஞர் ஒருவர் அமித்ஷாவுக்கு டிவிட் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Young man tweet to Amit Shah that Loneliness leads to Suicide Attempt

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்தவர் ராம் .இவர்  கோவையில் தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார். கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தனது சொந்த ஊரான கோத்தகிரிக்கு செல்ல முடியாமல் ராம் தவித்து வந்துள்ளார். கோவை  கவுண்டர் மில் பகுதியில் உள்ள தனது அறையில் தனிமையில் இருந்துள்ளார்.

இந்தச்சூழ்நிலையில் தனிமையிலிருந்த ராமிற்கு மன அழுத்தம் ஏற்பட்டு  தற்கொலை எண்ணம் தோன்றுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அவர் ட்வீட் செய்திருந்தார். இந்நிலையில் இந்த டிவிட்டை பார்த்த கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், சம்பந்தப்பட்ட இளைஞருக்குத் தேவையான உதவிகளைச் செய்யுமாறு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமாருக்கு அறிவுறுத்தினார்.

இதையடுத்து தனது ட்விட்டில் ராம் குறிப்பிட்டிருந்த எண்ணிற்குத் தொடர்பு கொண்ட காவல்துறையினர், நேரடியாக அவரது அறைக்குச் சென்றனர். அங்குத் தனிமையிலிருந்த ராமை அழைத்துக் கொண்டு வெளியே வந்த காவல்துறையினர், அவரை சகஜ நிலைக்கு கொண்டு வர முடிவு செய்தனர். இதற்காகத் தடையை மீறி  இருசக்கர வாகனம் ஓட்டி வருபவர்களைத் தடுத்து நிறுத்தி அவர்களுக்கு அறிவுரை சொல்லும் பணியில் ஈடுபடுத்தினர். ஆனாலும் மனஅழுத்தம் குறையவில்லை என அந்த இளைஞர் கூறியதோடு, கண்டிப்பாக ஊருக்குச் செல்ல வேண்டும் என்று போலீசாரிடம்  வலியுறுத்தினார்.

இதைத் தொடர்ந்து  இருசக்கர வாகனத்திலேயே இளைஞர் ராம்  கோத்தகிரி செல்வதற்கான ஏற்பாடுகளைக் கோவை போலீசார் செய்து கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து ராம் இருசக்கர வாகனம் மூலம் கோத்தகிரி சென்றடைந்தார். உதவி கேட்டு மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு டிவிட் செய்த நிலையில், கோவை காவல்துறையினர் அந்த இளைஞருக்கு உதவியுள்ள சம்பவம் சமூகவலைத்தளங்களில் பாராட்டை பெற்றுள்ளது.

Tags : #SUICIDEATTEMPT #CORONA #CORONAVIRUS #TWITTER #COIMBATORE #AMIT SHAH